தற்போதைய செய்திகள்

மக்களின் நலன் ஒன்றே கழக அரசின் லட்சியம் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேச்சு

திருச்சி

மக்களின் நலன் ஒன்றே லட்சியமாக கொண்டு கழக அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் கூறினார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகிலுள்ள ஸ்ரீ சிதம்பரம் திருமண மண்டபத்தில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சி மாநகர் மாவட்டக் கழக அவைத்தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் கலந்து கொண்டு கூட்டுறவு வாரவிழாவையொட்டி நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் சிறந்த பணியாளர்களுக்கும் கேடயங்கள், 764 பயனாளிகளுக்கு ரூபாய் 9.77 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசியதாவது:-

தமிழக அரசு விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு வட்டியில்லா பயிர்கடன் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 01.04.2019 முதல் 31.10.2019 வரை 26114 விவசாயிகளுக்கு ரூ.180.81 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் தாய்மார்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு, அவர்களுக்கு ஆடு, மாடு, மற்றும் விவசாய கருவிகள் வாங்கிடவும், பால் பண்ணை அமைத்திடவும், மத்திய கால கடன்கள் வழங்கப்படுகிறது. இதுவரை திருச்சி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 1648 விவசாயிகளுக்கு மத்திய கால கடனாக ரூ.8.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாத்து பதப்படுத்திடவும் அவ்வப்போது உயரும் விலைவாசியை கட்டுப்படுத்திட திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 12000 மெ.டன் கொள்ளளவு கொண்ட ரூ.14.76 கோடி செலவில் மொத்தம் 90 கிட்டங்கிகள் கட்டப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் 10 கிட்டங்கிகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழக அரசு மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

வணிகர்களுக்கு வழங்கப்படும் வணிகக் கடன் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு வணிகர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறு வணிகக் கடன் ரூ.25,000 தற்போது ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பணிபுரியும் மகளிர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த கடன் தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.