தற்போதைய செய்திகள்

1854 பயனாளிகளுக்கு ரூ.27.54 கோடி கடனுதவி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்- தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினர்

திருவண்ணாமலை

செய்யாறில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 1854 பயனாளிகளுக்கு ரூ.27.54 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் 1007 பயனாளிகளுக்கு பயிர் கடன், ரூ.18.4 கோடி மதிப்பீட்டில் 390 குழுக்களுக்கு மகளிர் குழு கடன், ரூ.17.8 கோடி மதிப்பீட்டில் 340 பயனாளிகளுக்கு முதலீட்டு கடன், ரூ.42.25 லட்சம் மதிப்பீட்டில் 117 பயனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் என மொத்தம் 1854 பயனாளிகளுக்கு ரூ.27 கோடியே 54 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கீழ்பென்னாத்தூர் கிளைக்கு ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 2 தொடக்க கூட்டுறவு பண்டக சாலைக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.2.80 கோடி மதிப்பில் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

போளூர், செங்கம், திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி ஆகிய கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டது. மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் கூட்டுறவு அச்சகத்திற்கும் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும், 5 கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிகளுக்கு கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பிரதான கிளையில் ஏடிஎம் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கம் சார்பில் 7 கூட்டுறவு மருந்தகங்கள், 3 அம்மா மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பண்ணை பசுமை காய்கறி அங்காடி நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுச்சேவை மையங்கள் மூலம் ரூ.44.70 லட்சம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. வேளாண் மருத்துவ பயன்பாட்டு மையங்கள் மூலம் 4850 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வேளாண் சேவை மையங்கள் மூலம் 100 கூட்டுறவு சங்கங்களுக்கு உழவு இயந்திரங்களான டிராக்டர், மினி டிராக்டர், பயிர் நடவு இயந்திரம் மற்றும் இதர கருவிகளுடன் குறைந்த வாடகைக்கு விடப்பட்டு அதன்மூலம் தலா ஒரு சங்கத்திற்கு ரூ.2.76 லட்சம் வருமானம் வருகிறது.

1-4-2016 முதல் 31-10-2019 வரையிலான காலத்தில் குறுகிய கால பயிர்க்கடனாக 2,87,339 நபர்களுக்கு 1467.46 கோடி ரூபாயும், மத்திய கால கடனாக 7002 நபர்களுக்கு 34.98 கோடி ரூபாயும், 14447 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.337.96 கோடியும், 675 பணிபுரியும் மகளிர்களுக்கு ரூ.3.14 கோடியும், 6872 மகளிர் தொழில் முனைவோர்க்கு ரூ.17.17 கோடியும், 1490 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.60 கோடியும், 14197 சிறு வியாபாரிகளுக்கு ரூ.21.52 கோடியும்,

175 நபர்களுக்கு வீட்டு வசதி மற்றும் வீடு அடமான கடனாக ரூ.4.72 கோடியும், பண்ணை சாரா கடனாக 59 நபர்களுக்கு ரூ.1.07 கோடியும், தானிய வீட்டுக்கடனாக 5381 நபர்களுக்கு ரூ.27.08 கோடியும், நகைக்கடனாக 4,04,555 நபர்களுக்கு ரூ.1502.59 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. பொதுவிநியோக திட்டத்தின்கீழ் 6.62 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.