தற்போதைய செய்திகள்

மலை கிராமங்களில் தனி துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் பி.தங்கமணி உறுதி

வேலூர்

மலை கிராமங்களில் தனி துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி உறுதி அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றும் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான மகளிர் விளையாட்டு போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இந்த மண்டல அளவிலான மகளிர் போட்டிகளில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் வேலூர் மண்டலங்களை சார்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல் மூன்று இடங்களை பிடித்த மண்டலங்களுக்கு வெற்றி கோப்பைகளையும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம், தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழகம் எதிர்கொண்ட வர்தா, ஒக்கி மற்றும் கஜா புயலின்போது ஏற்பட்ட பாதிப்புகளின்போது சென்னை நகருக்கு சுமார் 3 மணி நேரத்தில் 30 சதவிகிதம் மின்சாரத்தை சீர்செய்து கொடுத்த பெருமை மின்துறை ஊழியர்களையே சாரும்.

அதேபோல கஜா புயலால் சுமார் 3.60 லட்சம் மின்கம்பங்களை ஒரு மாதத்திற்குள்ளாக மாற்றி மக்களுக்கு மினசாரத்தை வழங்கி தங்கள் உயிரை பணயம் வைத்து குடும்பத்தை மறந்து கடினமாக உழைத்தவர்கள் மின்துறை ஊழியர்கள் அலுவலர்கள் ஆவார்கள். இதுபோல ஆண்டு முழுவதும் பணியாற்றும் பணியாளர்களிடையே இதுபோல விளையாட்டு போட்டிகளை நடத்துவது பணியாளர்களுக்கு பணிகளின் மேல் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க ஊழியர்கள் அயராது பாடுபடுகின்றனர். அவ்வப்போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளின்போது பொதுமக்கள் மின்சார ஊழியர்களை உடனடியாக மின்சாரம் வழங்கவில்லை என்று குறை கூறுகிறார்கள். இதுபோன்ற காலங்களில் பணியாளர்கள் எந்தவிதமான பணிகளை செய்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்வின்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்கும் எவ்வளவு நேரம் பணியாளர்கள் எவ்வளவு உள்ளனர் என்பதை உணர்ந்து குறைகளை கூற விழிப்புணர்வு மக்களிடையே தேவை.

தமிழகத்தில் 1682 துணை மின்நிலையங்கள் உள்ளன. இதில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 500 துணை மின்நிலையங்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்காண்டு 750 முதல் 1000 மெகாவாட் மின்சார தேவை ஏற்படுகிறது. இதை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின்சாரத்துறை தொடர்ந்து செயலாற்றி வருகிறது. வரும் 2025-ம் ஆண்டு தேவைக்கேற்ப சுமார் 6000 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மின்சாரத்துறையால் செய்யப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விட்டுசென்ற மின்மிகை மாநிலம் என்ற பெருமையை முதலமைச்சர் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறார். அணைக்கட்டு தொகுதி பீஞ்சமந்தை, ஐார்தாண்கொல்லை மலை கிராமங்களுக்கென்று தனி துணை மின்நிலையம் தேவை என சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். எந்தவொரு துணை மின்நிலைமும் அமைக்க இடம் தேர்வு செய்து வழங்கினால் உடனடியாக அம்மாவின் அரசு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசியல் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் உடனடியாக அமைத்து கொடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.ரவி, ஜி.லோகநாதன், ஜி.சம்பத், ஆவின் சேர்மன் த.வேலழகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, வேலூர் சர்க்கரை ஆலைத்தலைவர் ஆனந்தன், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், செல்வின் மற்றும் மின்துறை அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.