தற்போதைய செய்திகள்

தோல்வி பயம் எதிரொலி,உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் தயக்கம் – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தகவல்

விருதுநகர்:-

தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் தயங்குகின்றனர் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகரில் நகர, கிழக்கு, மேற்கு ஒன்றியம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். எடப்பாடியாரின் நல்லாட்சி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. மக்களின் பேராதரவை பெற்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். மக்கள் நமக்கு ஆதரவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளையும் கழக வேட்பாளர்கள் கைப்பற்றுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் நாம் பதவியை பிடித்தால் தான் கட்சியையும், ஆட்சியையும் பலப்படுத்த முடியும். எனவே கழக நிர்வாகிகள் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் ஆட்களை தேடி கொண்டிருக்கிறார்கள். எந்த பதவிக்கும் போட்டியிட அவர்களுக்கு ஆட்கள் இல்லை. தோல்வி பயத்தால் அவர்கள் போட்டியிட தயங்குகிறார்கள். ஆனால் கழகத்தில் ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுவதற்கு ஏராளமானோர் விருப்பமனு கொடுத்துள்ளனர். கழகத்தை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அழிந்தே போவார்கள். கட்சிக்கு புதிதாக யார் வந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் பதவிகள் வழங்கப்படும். அதே போல் நம்மிடம் இருந்து விலகி சென்றவர்கள் திரும்பி வந்து கொண்டி ருக்கிறார்கள். அவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தலுக்காக நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். அப்போது தான் நாம் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.