சிறப்பு செய்திகள்

மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

கோவை:-

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம், குனியமுத்தூர், செல்வபுரம் ஆகிய இடங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு 638 பயனாளிகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகாலம் காணாத பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் இந்தியாவிலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிக அளவிலான வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் கழக ஆட்சியில் கழக நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டு அயராது உழைத்து வருகின்றனர்.

2011-க்கு முன்பு கோவை மாவட்டம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். தற்போது கோவை மாவட்டத்தில் அகலப்படுத்தப்பட்ட சாலைகள், மேம்பாலங்கள், பூங்காக்கள், கூட்டு குடிநீர் திட்டங்கள், அனைத்து பகுதிகளிலும் தடையில்லா குடிநீர், மேம்படுத்தப்பட்ட சாலைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், சமுதாய கூடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று உள்ளது.

சென்னையில் தான் பாலங்கள் அதிகமாக உள்ளது என்பார்கள். ஆனால் தற்போது கோவையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஏராளமான பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளோம். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான பாதாள சாக்கடை திட்டப்பணிகள் செல்வபுரம், குனியமுத்தூர், குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வரின் ஆட்சியில் இயற்கை நம்முடன் இருந்து மழை பெய்துள்ளது. குடிமராமத்து திட்டத்தால் கோவையில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால் இதில்கூட திமுகவினர் அரசியல் செய்ய பார்த்தனர். அது நடக்கவில்லை.

70 ஆண்டுகால பிரச்சினையான அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நிறைவேற்றி யுள்ளார்.  இதுமட்டுமன்றி அத்திக்கடவு இரண்டாம் கட்ட திட்டத்தில் தொண்டாமுத்தூர் குளங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்தால் அதிகப்படியான ஐடி கம்பெனிகள் வரும். ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ரூ.90 கோடியில் கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.250 கோடி நிதியை முதல்வர் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கியுள்ளார். முன்பெல்லாம் இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தற்போது கோவை அரசு மருத்துவமனையிலேயே இதற்கான சிகிச்சைகளை ஏழை, எளிய மக்கள் பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட மக்களுக்கு பார்த்து பார்த்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதுமட்டுமன்றி கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, பல்லடம், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் ஆகிய இடங்களில் ஏழை, எளிய மக்கள் உயர்கல்வி பயில அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மக்களின் பொழுதுபோக்கிற்கு சிறந்த இடமாக மெரினா பீச் உள்ளது போல கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் குளப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் குறிச்சி குளமும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே உள்ளாட்சித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதிலும் மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்குவதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.உள்ளாட்சித் துறையில் இதுவரை 86 தேசிய விருதுகளை பெற்றுள்ளோம். கிராமங்களில் குடிநீர் குழாய்கள் மூலம் 99 சதவீதம் குடிநீர் வழங்கி சாதனை செய்துள்ளோம். மேலும் கிராமங்களில் வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டி தரப்பட்டு வருகிறது. இதற்கு முன்னால் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் என்ன செய்தார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.57 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பித்துள்ள வேலைக்கு செல்லும் மகளிர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் கட்டாயம் தரப்படும்.
கழகம் தான் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றும் என்றும், திமுக போன்ற கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வீசுவார்கள் என்றும் தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆகவே தான் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை தந்து திமுகவை தூக்கி எறிந்துவிட்டனர்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.