சிறப்பு செய்திகள்

ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி நிதி – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை, ஹுஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பனிடம் வழங்கினார்.

இந்தியாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்தி, தமிழ் வளர்க்கும் அற்புதமான திட்டம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும் என்று முதலமைச்சர் 28.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, அமெரிக்க நாட்டின், டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட, ஹுஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்குத்தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ஹுஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பனிடம் வழங்கினார்.

அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதால், அங்கு வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அந்நாட்டவரும், தமிழ் மொழியை கற்கவும், தமிழ்ப் பண்பாட்டை அறிந்து கொள்ளவும், செவ்வியல் இலக்கியங்கள் தொட்டு நவீனகால இலக்கியங்கள் வரை கலை, பண்பாடு, அறிவியல் சிந்தனைகள், மொழித்திறன், தொன்மம் ஆகிய பொருண்மைகளில் ஆய்வு செய்யவும், அம்முடிவுகளை உலகிற்கு தெரிவிக்கவும் இதன்மூலம் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், ஹுஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் உலகத் தூதுவர் டாக்டர் விஜய்பிரபாகர், நிர்வாகிகள் ஜெ.ஜெயசிங், பி.எல்.ராமகிருஷ்ணன், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.