சிறப்பு செய்திகள்

கஜா புயலின்போது அரசு எடுத்த நடவடிக்கை : முதலமைச்சரிடம் ஆய்வறிக்கை ஒப்படைப்பு

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம்  தலைமைச் செயலகத்தில், 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம்
16-ந்தேதி தமிழ்நாட்டை தாக்கிய ‘கஜா’ புயலின் போது தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையின் நகலை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் வி.திருப்புகழ் வழங்கினார்.

இந்த அறிக்கையில் கஜா புயலினை முன்னிட்டு புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள், அதற்கான அரசு, அரசுத்துறை சார்ந்தோர் மற்றும் சமூக ஆர்வலர்களின் பணிகள், சிறந்த நடவடிக்கைகள் மற்றும் இந்தப் பணிகள் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களால் எதிர்வரும் காலங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் ஆகிய தலைப்புகளில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மாநில அரசு மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிர்வாகங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வறிக்கை அளிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கஜா புயலால் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டப் பகுதிகள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட சமுதாயம், அதன் உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் நேர்முகம் காணப்பட்டது.

வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மின்சார வாரியம், கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்களிடமும் விரிவான நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட சமுதாய மக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள், அதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகள், கஜா புயல் தொடர்பான ஆய்வுகள், தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட பின்பற்றத்தக்க நல்ல நடைமுறைகள், இந்த அனுபவத்தால் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான பரிந்துரைகள் ஆகிய தலைப்புகளில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் இவ்வறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் வருவதற்கு முன்பே மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றது, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் முதல்நிலை மீட்பாளர்களை தயார் நிலையில் வைத்திருந்தது, பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருந்தது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை நியமித்து, அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து பணிகளை கண்காணித்தது, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு 27 அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பெட்டகத்தினை வழங்கியது போன்ற தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வின்போது, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையரும், முதன்மைச் செயலாளருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.