சிறப்பு செய்திகள்

5 புதிய மாவட்டங்கள் தொடக்க விழா – முதல்வர் நேரில் சென்று தொடங்கி வைக்கிறார்

சென்னை

நிர்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு மற்றொரு புதிய மாவட்டம் உதயமாகி இருக்கிறது.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகிறது. இதற்கிடையே வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் ஒரு மாவட்டமாகவும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகியவை மேலும் இரண்டு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.

இந்த 5 மாவட்டங்களுக்கும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மாவட்டங்களுக்கான இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே 5 புதிய மாவட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அந்தந்த மாவட்ட தலைநகரங்களுக்கே சென்று தொடங்கி வைக்கிறார்.

வரும் 22-ந்தேதி காலை 9.30 மணி அளவில் தென்காசி மாவட்ட தொடக்க விழா நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து தென்காசிக்கு முதலமைச்சர் காரில் செல்கிறார். அங்கு காலை 9.30 மணி அளவில் புதிய மாவட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

27-ந்தேதி காலை 10.45 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் கள்ளக்குறிச்சிக்கே சென்று தொடங்கி வைக்கிறார். வரும் 28-ந்தேதி காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை அந்தந்த மாவட்ட தலைநகரங்களான ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களுக்கு சென்று திறந்து வைக்கிறார். 29-ந்தேதி காலை 12.15 மணிக்கு செங்கல்பட்டு புதிய மாவட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

இந்த தொடக்க விழாவையொட்டி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் விழா ஏற்பாடுகள் மிக சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகின்றன. 25-ந்தேதி கடலூரில் ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் மற்றும் அவரது திருவுருவ சிலையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறார்.