தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் விரைவில் ரூ.300 கோடி தொழில்பூங்கா – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் ரூ.300 கோடியில் தொழில்பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ெதரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, வருவாய்த்துறையின் மூலம் 474 பயனாளிகளுக்கு ரூ.1,49,89,344 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாவிற்கான உத்தரவு மற்றும் 471 பயனாளிகளுக்கு ரூ.4,71,000 மதிப்பிலான முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகள், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ.3,10,510 மதிப்பிலான விலையில்லா வெள்ளாடுகள்,

வேளாண்மைத்துறையின் மூலம் 11 விவசாயிகளுக்கு தார்ப்பாய், ரூ.23,351 மதிப்பிலான விவசாய இடுபொருட்கள், மகளிர் திட்டத்தின் மூலம் உழைக்கும் 16 மகளிர்களுக்கு ரூ.4,00,000 மானியத்தில் அம்மா இருசக்கர வாகனங்கள், எட்டயபுரம் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் தொழில்நுட்பக்கல்லூரி மூலம் 129 மாணவிகளுக்கு ரூ.13,41,600 மதிப்பிலான விலையில்லா மடிகணினி என மொத்தம் 1125 பயனாளிகளுக்கு ரூ.1,75,35,805 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பாக மக்கள் அரசை தேடி செல்லும் நிலை இருந்தது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றபோது இந்த நிலையை மாற்றி மக்களை தேடி அரசு செல்கின்ற நிலையை ஏற்படுத்தினார். குறிப்பாக கிராமப்புறத்தில் வசிக்கின்ற மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா திட்ட முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், அம்மா திட்ட முகாம்களில் காலையில் பெறப்படும் குடும்ப அட்டை திருத்தம் தொடர்பான மனுக்களுக்கு மாலையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒவ்வொரு மருத்துவமனை செல்லும் நிலை இருந்ததை மாற்றி, புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியில் அம்மா மருத்துவ முகாம்கள் மூலம், பொதுமக்களுக்கு மருத்துவர்கள் மூலம் தேவையான பரிசோதனைகள், சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் பங்களிப்புடன் பல்வேறு இடங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஊரணிகள், குட்டைகள் தூர்வாரப்பட்டு மழைநீரை சேமிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொட்டில் குழந்தைகள் திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். மேலும், டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், பின்பு ரூ.18 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கினார். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தில் அனைத்து வட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விளாத்திகுளம் பகுதியில் சுமார் ரூ.300 கோடி செலவில் தொழிற் பூங்கா அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, துணை ஆட்சியர் சங்கரநாரயணன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர்கள் ராஜ்குமார், அழகர், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் கணேசன், சங்கரநாராயணன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், எட்டயபுரம் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் தொழில்நுட்பக்கல்லூரி பேபிலதா, முக்கிய பிரமுகர்கள் பால்ராஜ், ஞானகுருசாமி, தனஞ்செயன், காந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.