தற்போதைய செய்திகள்

தீப்பெட்டி, நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை அமைச்சர் கே,டி.ராஜேந்திர பாலாஜி தகவல்

விருதுநகர்

தீப்பெட்டி, நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அருப்புக்கோட்டை நகரம், ஒனறியம் சார்பாக கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

அருப்புக்கோட்டை என்று சொன்னாலே அஇஅதிமுகவின் எஃகு கோட்டை தான். இந்த தொகுதியில் கட்சி நிர்வாகிகள் எழுச்சியோடு இருக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் ஒரு பதவிக்கு 5 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். ஆனால் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க முடியும். அந்த வேட்பாளரை நாம் சரியாக தேர்வு செய்ய வேண்டும். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்குதான் வாய்ப்பு, அஇஅதிமுகவுக்கு கிடையாது என்று கூறினர்.

ஆனால் மக்கள் கையை வைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து ரெட்டியார்பட்டி நாராயணனை மாபெரும் வெற்றிபெற வைத்தனர். இதே போன்று விக்கிரவாண்டியி்ல் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி பெற்றார். மக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்திற்கு உள்ள மவுசு குறையவில்லை. அதிமுக இல்லாமல் தமிழகத்திலும் சரி டெல்லியிலும் சரி யாரும் அரசியல் செய்ய முடியாது.

அருப்புக்கோட்டை சாத்தூர், விருதுநகர் நகராட்சிகளுக்கு ரூ.444 கோடியில் புதிய கூட்டுக்குடிநீா் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. என்னுடைய கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்திற்கு ரூ444 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அருப்புக்கோட்டை நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீ்ர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது அருப்புக்கோட்டையில் தண்ணீர் பஞ்சம் எப்போதும் வராது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர், மானூர் கூட்டுக்குடிநீர், சீவலப்பேரி கூட்டுக்குடிநீர், முக்கூடல் கூட்டுக்குடிநீர் உட்பட அனைத்து கூட்டுக்குடிநீர் திட்டங்களும் கழக ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திருத்தங்கல், சாட்சியாபுரம், இருக்கன்குடியில் விரைவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைய இருக்கிறது. எனவே கழக நிர்வாகிகள் தைரியமாக ஓட்டுக் கேட்கலாம். நெசவு தொழிலுக்கும், தீப்பெட்டி தொழிலுக்கும் 12 சதவிகிதமாக இருக்கும் ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வர் மூலம் இந்த இரண்டு தொழில்களுக்கும் விரைவில் ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி‘றது. நெசவாளர்களுக்கு கூலி உயர்வு கொடுத்தது கழக அரசுதான்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், ஒன்றிய கழக செயலாளர்கள் சங்கரலிங்கம், வெங்கடேஷ், நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன், முன்னாள் யூனியன் தலைவர் யோகவாசுதேவன், மகளிரணி செயலாளர் பிரேமா, எம்ஜிஆர் மன்ற செயலாளர் மூக்கையா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மச்சராஜா, தொழிற்சங்க பிரிவு செயலாளர் ஜெயசங்கர், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, சிவகாசி எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் உட்பட அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.