தமிழகம்

புரட்சித்தலைவி அம்மா பெயரில் சிறப்பு கலைமாமணி விருதுகள் – முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை:-

புரட்சித்தலைவி அம்மா பெயரில் சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெற்றது. தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விழா மலரை வெளியிட சபாநாயகர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 200-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு கலைமாமணி விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் புரட்சித்தலைவி அம்மா பெயரில் 3 கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் தேவா ஆகியோர் கலைமாமணி விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார். இந்த விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ், செல்லூர் கே.ராஜூ, கலை பண்பாட்டுத்துறை கமிஷனர் (பொறுப்பு) பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் வீ.தங்கபாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.