தற்போதைய செய்திகள்

மதுரை மாநகராட்சியில் குழாய் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் விநியோம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

மதுரை

மதுரை மாநகராட்சியில் குழாய் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகராட்சி வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்லூரில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி, அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி, பல்லடுக்கு வாகன வசதி, புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு கண்மாய்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரித்து
வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்லூர் கண்மாய், நிலையூர் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் நீர் தேக்கி
வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் உத்தரவின்படி மதுரை வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் வகையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் கட்டி வைகை ஆற்றில் கலக்காதவாறு புதிய திட்டப் பணிகள் துவங்கப்பட உள்ளது. அம்மா அவர்கள் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார்.
பெண்கள் நாட்டின் மிக சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காக சமூக நலத்துறை சார்பின் ஒவ்வொரு
பெண்களும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி, அம்மா இரு சக்கர
வாகனம் உள்ளிட்ட பல்வேறு நிதியுதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்
தொகையை உயர்த்தி வழங்கியும், அரசு புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு
இலவச பட்டாவை அம்மாவின் அரசானது வழங்கி வருகிறது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டு பகுதிகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதற்காக
முதலமைச்சர் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியார் லோயர் கேம்ப் பகுதிகளில் இருந்து இரும்பு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு பண்ணைப்பட்டியில் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்குவதற்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இனி வருங்காலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படும்.

மதுரை மாநகராட்சி வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 20 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள்
அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான சேவையை செய்யும் முதலமைச்சர் தலைமையிலான சர்க்கரை கார்டுதாரர்கள் அரிசி கார்டுகளாக மாற்றி கொள்ளலாம் என்று தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவர். அம்மா அரசானது ஏழை எளியோர் உணவருந்துவதற்காக அம்மா
உணவகங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, நகர பொறியாளர் அரசு, வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிப் ஆணையாளர் பழனிச்சாமி உள்பட அலுவலர்கள்
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.