சிறப்பு செய்திகள்

தென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம் – முதலமைச்சர் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவி வழங்குகிறார்…

திருநெல்வேலி

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக, தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து புதியதாக மாவட்டங்கள் தோற்றுவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும், வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் என 5 புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கீழ்காணும் தேதிகளில் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை நேரில் சென்று தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், இவ்விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், விழா பேருரையாற்றி சிறப்பிக்க உள்ளார்.

22.11.2019 – தென்காசி (காலை)
26.11.2019 – கள்ளக்குறிச்சி (காலை)
28.11.2019 – திருப்பத்தூர் (காலை)
28.11.2019 – இராணிப்பேட்டை (மதியம்)
29.11.2019 – செங்கல்பட்டு (மதியம்)

இந்த விழாக்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம தலைமை வகிக்க உள்ளார். அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத்தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் இன்று தொடங்கப்படுவதையொட்டி தென்காசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. புதிய மாவட்டத்தை தொடங்கி வைப்பதற்கு வருகை தரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் கழகத்தின் கொடிகள் கட்டப்பட்டு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட எல்லையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கு கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.