சிறப்பு செய்திகள்

தென்காசி 33-வது மாவட்டம் உதயமானது – முதலமைச்சர் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் பெரிய மாவட்டமாக திகழ்ந்து கொண்டிருந்தது. இதனால் மக்கள் தங்கள் குறைகளை ஆட்சியரிடமோ, ஆட்சியர் அலுவலகத்திலோ சென்று சொல்வதற்கு நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியது இருந்தது. அதனால் மக்களின் குறைகளை கேட்டும், நிர்வாக வசதிக்காகவும் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரக்கப்பட்டு தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இதன் தொடக்க விழா தென்காசி இசக்கி மகாலில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தலைமை செயலாளர் க.சண்முகம், அரசு முதன்மை வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர், தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட அருண்சுந்தர் தயாளன், மாநிலங்களவை உறுப்பினர்கள் விஜிலா சத்தியானந்த், எஸ்.முத்துக்கருப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் முருகையா பாண்டியன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன், ஐ.எஸ்.இன்பதுரை, ஏ.மனோகரன், வெ.நாராயணன், மாவட்ட கழக செயலாளர்கள் தச்சை கணேஷ ராஜா, பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாதஸ்வர இன்னிசை முழங்க புதிய மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த புதிய மாவட்டத்தில் 2 வருவாய் கோட்டங்களும், 8 தாலுகாக்களுக்கும் இடம் பெற்றுள்ளன. விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து புதிய மாவட்டம் தொடங்கப்பட்டபோது விண்ணதிர வாழ்த்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரு வருவாய் கோட்டங்களுடன், தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்களும் இடம் பெற்றுள்ளன.