சிறப்பு செய்திகள்

தி.மு.க. எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீருவோம் – முதலமைச்சர் சூளுரை

திருநெல்வேலி

தி.மு.க. எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிலர் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறார்கள். எத்தனை முட்டுக்கட்டைகள் போட்டாலும் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். மாநில தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை தொடங்கி விட்டது.

உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட சூழ்ச்சி நடக்கிறது என்று ஸ்டாலின் சொல்கிறார். மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த தேர்தலை கொண்டு வந்ததே தி.மு.க. அரசு தான். 1996 வரை கவுன்சிலர்கள் தலைவர்களை தேர்ந்தெடுத்து வந்தனர். ஸ்டாலின் மேயராக வர வேண்டும் என்பதற்காகத் தான் 2006-ம் ஆண்டு தி.மு.க.வினர் நேரடி தேர்தலை கொண்டு வந்தனர். பின்னர் அதை மீண்டும் மாற்றியதும் தி.மு.க. தான்.

அப்போது சட்டமன்றத்தில் ஸ்டாலின் பேசும்போது மேயர் ஒரு கட்சியாகவும், கவுன்சிலர்கள் வேறு கட்சியாகவும் இருந்தால் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. எனவே மறைமுக தேர்தல் நடத்தப்படுவதாக கூறினார். இப்போது அதையே நாமும் சொல்லி சட்டம் கொண்டு வந்திருக்கிறோம். பல மாநிலங்களில் மறைமுக தேர்தல் தான் நடைபெறுகிறது. எனவே எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.