சிறப்பு செய்திகள்

அறிவிப்பை அறிவிப்பாகவே விட்டுவிடாமல் செயல்படுத்தும் ஒரே ஆட்சி அம்மா ஆட்சி – துணை முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

அறிவிப்பை அறிவிப்பாகவே விட்டு விடாமல் செயல்படுத்தும் ஒரே ஆட்சி அம்மாவின் ஆட்சி என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் கூறினார்.

தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-

தேனருவி முதல் பாலருவி வரையிலான குற்றால அருவிகளின் குளிர்ச்சியை தனதாக்கிய குளிர் மனமும், கள்ளமில்லா நல்ல உள்ளமும் கொண்ட மக்கள் நிறைந்து வாழும் தென்காசித் திருநகரை தலைநகராக கொண்டு, மலர் வனம் கொண்ட மலைகளையும், தளிர் என நடந்து, தடைகளைக் கடந்து, மூலிகை வளத்தை தன்னோடு சுமந்து, ஓடி வந்து வீழுகின்ற அருவிகளையும், அருள் மழை பொழியும் ஆண்டவன் உறையும் ஆலயங்களையும், பசுமை போர்த்திய வயல்வெளிகளையும், உள்ளடக்கி, “தென்காசி மாவட்டம்” என்னும் பெயரில், தமிழகத்தின் தங்க கிரீடத்தில் பதிக்கப்படும் புது வைரமாக புதிய மாவட்டம் தொடங்கப்படும் இந்த இனிய விழாவிற்கு, தலைமை ஏற்கின்ற நல்வாய்ப்பை எனக்கு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய, அனைத்து தரப்பு மக்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கக் கூடிய, துடிப்புடன் செயல்படக் கூடிய, உயிரோட்டமுள்ள, அறிவு சார் சமூகமாக, தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்பது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ட கனவாகும்.இந்த கனவை நனவாக்க, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மேற்கொண்ட நடவடிக்கைகளும், செயல்படுத்திய திட்டங்களும், துறைகள் தோறும் அம்மா அவர்கள் உருவாக்கிய கொள்கைகளும் எண்ணற்றவை ஆகும்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், புரட்சித்தலைவி அம்மா அவர்களே கூறியபடி, அரசின் சட்டதிட்டங்களை நிறைவேற்றும் முக்கிய கருவியாகவும், மக்களை நாடிச் சென்று உதவிகள் புரியும் ஆபத்பாந்தவனாகவும், அரசாங்கத்தின் ஆணிவேராகவும், நிர்வாகத்தின் முதுகெலும்பாகவும், மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதுமான, வருவாய்த் துறையை முடுக்கி விட்டு, அதன் செயல்பாடுகளை மேம்படுத்தி, முனைப்பான நடவடிக்கைகளை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்டார்.

பொதுமக்களின் பெரும்பாலான தேவைகள் வருவாய்த் துறையையே சார்ந்திருப்பதை உணர்ந்து, அதன் உயர் அலுவலர்களை அணுகும் பொதுமக்களின் பயண நேரத்தை வெகுவாகக் குறைத்திடவும், வருவாய்த் துறையின் சேவை காலதாமதமின்றி மக்களை அடைந்திடவும், புதிய வட்டங்களை, புதிய கோட்டங்களை, புதிய மாவட்டங்களை புரட்சித்தலைவி அம்மா உருவாக்கினார்.

ஒரு மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் விளங்குவதால், மாவட்டத்தின் ஒரு முனையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அணுக மக்கள் எவ்வகையிலும் துன்பப் படக்கூடாது என்ற கருணை மனதுடன், புதிய மாவட்டங்கள் தொடங்குவதில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனி கவனம் செலுத்தினார்.

* தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள்,

* தென் ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து புதிதாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்.

* திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள்

* தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருஷ்ணகிரி மாவட்டம்

என, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது ஆட்சிக் காலங்களில், மொத்தம் 7 புதிய மாவட்டங்களை உருவாக்கினார். இதற்கு முன்னதாக, நம்முடைய கழகத்தின் நிறுவனத் தலைவரும், வரையாது வழங்கிய வள்ளல் பெருந்தகையுமான பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தம்முடைய ஆட்சிக் காலத்தில், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியதை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்ந்திட கடமைப்பட்டுள்ளேன்.

இப்படி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் வகுத்துத் தந்த பாதையில் நடை பயின்று,
அம்மா அவர்களின் அடியொற்றி, நம்முடைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தென்காசி மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் என ஐந்து புதிய மாவட்டங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அறிவிப்பை அறிவிப்பாகவே விட்டுவிடாமல், செயலாக்கிக் காட்டுகின்ற ஆட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் அறிவித்த 5 புதிய மாவட்டங்களில் முதல் மாவட்டமாக தென்காசி மாவட்டத்தின் தொடக்க விழா இன்று சீரோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நில வளமும், நீர் வளமும் மலை வளமும், வன வளமும் பின்னிப் பிணைந்து நோக்குமிடம் எல்லாம், இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் சுற்றுச் சூழலில் அமைந்திருக்கும் தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையாக விளங்குகிறது.

“வானரங்கள் கனி கொடுத்து
மந்தியோடு கொஞ்சும்!
மந்தி சிந்து கனிகளுக்கு
வான்கவிகள் கெஞ்சும்!
கானவர்கள் விழி எறிந்து
வானவரை அழைப்பார்!
கமன சித்தர் வந்து வந்து
காய சித்தி விளைப்பார்!
தேன் அருவித் திரை எழுப்பி
வானின் வழி ஒழுகும்!
செங்கதிரோன் பரிக்காலும்
தேர்க்காலும் வழுகும்!
கூனல் இனம் பிறை முடித்த
வேணி அலங்காரர்,
குற்றாலத் திரிகூட
மலை எங்கள் மலையே! ”

என்று தென்காசிக் குற்றாலத்தின் மலை வளத்தை குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடுகிறார்.
தென்காசி என்று, சொல்லக் கேட்டதும் அருள் மழை பொழியும் காசி விஸ்வநாதர் ஆலயமும், பல்வேறு மூலிகைகள் கலந்து ஓடி வரும் தண்ணீரை ஏந்தி வரும் குற்றால அருவிகளும் நம் கண் முன்னே விரியும். ஒரு மாவட்டத்திற்குத் தேவையான அனைத்து சிறப்புகளையும் கொண்டதாக, தென்காசி மாவட்டம் விளங்குகிறது.

கல்லூரிகள், பள்ளிகள், வங்கிகள், திருக்கோயில்கள், திருமடங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், சுற்றுலாத் தலங்கள், திருமலைப்புரம் ஓவியங்கள் மற்றும் தென்காசிப் பாண்டியர்கள் காலத்து இலக்கியங்கள் முதலான கலைச் செல்வங்கள், ஆகியவை மிகுந்து, இன்றைக்கும் சிறப்பு மிக்க தலமாக தென்காசி விளங்குகிறது.

இப்பகுதியின் முன்னேற்றத்திற்காக அம்மா அவர்களது அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளது. தென்காசியை தலைநகராகக் கொண்டு, தென்காசியின் பெயராலே அமைந்திருக்கும் இப் புதிய மாவட்டம், மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அவர்களது சிரமத்தை வெகுவாகக் குறைத்து, சிறந்த வளர்ச்சி பெற்று தமிழத்தின் தலை சிறந்த மாவட்டமாகத் திகழும் என்று உறுதியாக நம்புகிறேன்.புதிய தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கும், தென்காசி மாவட்டம் வாழ் மக்களுக்கும், எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து அமைகிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.