தற்போதைய செய்திகள்

மீனவர்களுக்கு அம்மா அரசு என்றென்றும் துணை நிற்கும் – அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி

கன்னியாகுமரி:-

மீனவர்களுக்கு அம்மா அரசு என்றென்றும் துணை நிற்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற உலக மீனவர் தின விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மீன்வளம், பணியாளர் (ம) நிர்வாகச் சீர்த்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் ஆகியோர் ஒக்கி புயலினால் முழு ஊனம் அடைந்த 2 நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவியாக தலா ரூ.4.50 லட்சத்திற்கான காசோலைகளையும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையையும் வழங்கினர்.

முன்னதாக, அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மீன்வளத்துறையானது மீன்வள ஆதாரங்களை வளங்குன்றா வண்ணம் பேணுதல், பயன்படுத்துதல், மேலாண்மை செய்தல் மற்றும் மற்றும் பாதுகாப்பான மீன்பிடிப்பிற்கு வழிவகுத்தல் மூலம் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, மீனவர்களையும், கடல் வளத்தையும் பாதுகாப்பது பலவிதமான மாசுக்களினால் மீன்வளத்திற்கு ஏற்படும் விளைவுகள் குறித்து, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகமெங்கும் நடத்தப்பட்டு வருகிறது.

எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இல்லாத அளவிற்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில் தான், இந்த அளவிற்கு மீனவர்களை பார்க்க முடிகிறது. சமூகம், கல்வி, பொருளாதாரத்தில் மீனவர்கள் முன்னேற பல திட்டங்கள் தமிழக அரசால், அம்மா அவர்களின் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தான், சுனாமி, ஒக்கி என பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டாலும், துணிச்சலாக நின்று, அனைத்தையும் எதிர்கொள்ளும் குணம் கொண்ட வீரமிக்க மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு மீன்வளத்துறைக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததில் 50 சதவீதம் முழுமையாக பயன்படுத்திய மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். இப்பகுதி மக்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தமிழக அரசால், சென்னையில், அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்ற மையத்தில், பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியினை மீனவ மக்கள் பயன்படுத்தி, நமது சமுதாயத்தை சார்ந்த இளைஞர்கள் தேர்வில் வெற்றி பெற்று, தங்களது வாழ்வில் பெருமை சேர்க்க வேண்டும்.

அம்மாவின் அரசு மீனவர்களின் நலம் காக்கும் அரசாக திகழ்ந்தது. வரும்காலங்களில் அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு என்றென்றும் துணை நிற்கும். இந்தியாவிலேயே அதிக அளவு கடல் அலை வேகமாக வீசுவது, கன்னியாகுமரி கடலில் தான். ஆனால், இப்பகுதி மக்கள் அதையும் மன தைரியத்தோடு எதிர்கொண்டு, தங்கள் தொழிலில், நேர்மையையும், தங்களது வாழ்வில் தைரியத்தையும் அதிகம் கொண்டவர்கள் குமரி மாவட்ட மீனவ மக்கள் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

விழாவில், கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, மீன்வளத்துறை இயக்குநர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைவர் சேவியர் மனோகரன், ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை தலைவர் சகாயராஜ், மீன்வளத்துறை துணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர்கள் மோகன்ராஜ், கே.டி.கோபிநாத் கலந்து கொண்டனர்.