சிறப்பு செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை குறிச்சிகுளம் சேர்ப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை குறிச்சிகுளம் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் வரதராஜபுரம் மற்றும் கரும்புகடை ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 2,366 பயனாளிகளுக்கு ரூ.8.91 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தமிழக மக்களின் நலனுக்காக மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இங்கு பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். பல்வேறு நலத் திட்டப் பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் தீர்வு காணப்படும். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அம்மாவின் திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தி வருகிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதியில் முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டம் அனைத்தும் செய்து வருகிறோம்.

கோவை மாவட்டம் 50 ஆண்டு காலம் காணாத அளவிற்கு வளர்ச்சியை கொடுத்துள்ளோம். இந்த சிங்காநல்லூர் பகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவை முழுவதும் பல்வேறு சாலைகள் போடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. அவிநாசி சாலையில் 9 கிலோ மீட்டருக்கு உயர்மட்ட பாலம் வர உள்ளது.

பொள்ளாச்சி சாலையில் ஆறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 20 நிமிடத்தில் சென்று விடலாம். அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி. அலுவலகம் மற்றும் அனைத்து பள்ளி கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளது. மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சினை இருக்காது. அனைத்து பகுதிகளிலும் முதியோர் உதவித் தொகை அதிகமாக வருகிறது. தகுதி இருப்பவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்கப்படும். சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் பல்வேறு பணிகள் செய்யபட்டுள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்கள் அம்மா இரு சக்கர வாகனம் வேண்டுமென்றால் மனு கொடுத்தால் உடனடியாக அவர்களுக்கு கொடுக்கப்படும். சுய உதவி குழுகளுக்கு தமிழகத்தில் 57 ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவி கொடுக்க பட்டுள்ளது. இதனால் பெண்கள் சொந்த தொழில் செய்து முன்னேறி வருகிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தை தொடர்ந்து குறிச்சி குளமும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கழக அரசின் தீவிர முயற்சியால் சிறுபான்மையினருக்கு ஹஜ் மானியம் ரூ 6 கோடி பெற்றுத்தந்தது, உலமாக்களின் ஓய்வூதியம் உயர்த்தியது, ஹாஜிகளுக்கு தொகுப்பூதியம் வழங்கியும் வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிர்வாக மானியம் 2 கோடியாக உயர்த்தியும், பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் இதர வக்பு நிறுவனங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக புனரமைப்பு மானியமும் வழங்கியது. இப்படி கழக அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கரும்புக்கடை பகுதி ஆசாத் நகர், அல்-அமீன் காலனி, பிலால் நகர், பகுதிகளில் கழக ஆட்சியில் சாலைகள், பாதாள சாக்கடை, திட்டம், குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி என எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறிச்சி, குனியமுத்தூர், சுண்ணாம்பு கால்வாய் ஆகிய இடங்களில் கபர்ஸ்தான் சீரமைக்க நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மக்களின் நலம் காக்க எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றது.
திமுக செய்த பொய் பிரச்சாரத்திற்கு தமிழக மக்கள் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தமிழக மக்கள் வாழ்வு உயர பல்வேறு திட்டங்களை தந்து பாடுபடும் ஒரே கட்சி அதிமுக தான் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டு விட்டனர். ஆகவேதான் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அஇஅதிமுகவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்கு என்றும் துணை நிற்போம். கோவையில் பல்வேறு பாலங்களை கட்டி வருகிறோம். அவிநாசி அத்திக்கடவு திட்டம் தந்துள்ளோம். எந்த தடைகள் வந்தாலும் புரட்சித்தலைவி அம்மாவின் திட்டங்கள் தொடரும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.