சத்துணவுத் திட்ட நாயகன் எம்.ஜி.ஆர். குடிமராமத்து நாயகன் எடப்பாடியார் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் புகழாரம்

திண்டுக்கல்:-
சத்துணவுத் திட்ட நாயகன் எம்.ஜி.ஆர்., குடிமராமத்து திட்ட நாயகன் முதலமைச்சர் எடப்பாடியார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் ஆத்தூர் வட்டம் செம்பட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி, தலைமையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 1,169 பயனாளிகளுக்கு ரூ.118.34 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கி பேசியதாவது:-
அரசைத் தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை தேடி அரசு என்ற சிறப்பான ஒருநிலை தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. “முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்” மூலம் அனைத்து கிராம, நகர்புற பகுதிகளிலும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அலுவலர்கள் மூலமாக முகாம்கள் நடத்தி மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியான 4,525 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலர்களால் அந்தந்த பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. ஏற்க இயலாத மனுக்களை மறு ஆய்வு செய்து, சிறு குறை இருப்பின் அதை சரி செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையிலும், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். சத்துணவு திட்டத்தின் நாயகனாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும், தாலிக்கு தங்கம் தந்த தலைவி புரட்சித்தலைவி என அம்மா அவர்களையும் பொதுமக்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் வழியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர்நிலைகளை சீர் செய்து, குடிமராமத்து நாயகனாக விவசாயிகள் மத்தியில் திகழ்கிறார்.
தமிழக மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக நத்தம் பகுதி மட்டுமல்லாது, திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கூடுதல் நிதி பெற்று குடிநீர் வழங்கும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் குடிநீர் பற்றாக்குறை இன்றி தன்னிறைவு பெற்றுள்ளது. மேலும், நத்தம் பகுதியில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கலுக்கு செல்லும் சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளை முதலமைச்சர் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.
தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கு.உஷா, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், அறங்காவலர் குழுத்தலைவர் பிரேம்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமராசு, ஆவின் துணைத்தலைவர் சிவலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.டி.நடராஜன், தனித்துணை ஆட்சியர் சிவக்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.