தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

காஞ்சிபுரம்

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
செங்கல்பட்டை அடுத்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரதீப்யாதவ் தலைமையில் நடைபெற்றது.

பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து பேசியதாவது:-

மாணவர்களின் எதிர்காலம் தான் இந்தியாவின் எதிர்காலம். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறைக்கு ரூ.28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வண்ணம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலத்தில் பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்குவது வழக்கம்.

தமிழ்நாட்டில் தான் ஜாமன்ட்ரி பாக்ஸ், காலணிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், புத்தகப்பை, மிதிவண்டி, மடிகணினி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் தந்து சாதனை படைத்துள்ளது இந்த அரசு. பணம் படைத்தவர்கள் மத்தியில் மட்டுமே இருந்த இந்த மடிகணினியை சாதாரண மாணவர்களும் பெற வேண்டும் என்பதற்காக அம்மா கொண்டு வந்தது தான் மடிகணினி வழங்கும் திட்டம். தற்போது மூன்று கட்டமாக மடிகணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அம்மாவின் வழியில் முதல்வரும், துணை முதல்வரும் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த திட்டங்களை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் நான்கு வகையான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கு தேவையான எல்லா பொருட்களும் வழங்கப்படும். அதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு முடித்தவுடன் சி.ஏ. படிக்க விரும்பும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 500 பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்த மாதம் முதல் மாணவர்கள் வேலை வாய்ப்பு உத்தரவாதம் பெற மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிற்சாலைகள் மூலம் தொழிற்பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல முயற்சி நின்றாலும் மரணம் தான் . முயற்சி மேற்கொள்ளுங்கள் வெற்றிபெறுங்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.