சர்க்கரை அட்டைதாரர்கள் விண்ணப்பித்தால் அரிசி விருப்ப அட்டையாக உடனே மாற்றம் – அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

திருவாரூர்
சர்க்கரை அட்டைதாரர்கள் விண்ணப்பித்தால் அரிசி விருப்ப அட்டையாக உடனடியாக மாற்றம் செய்து தரப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 491 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 64 ஆயிரத்து 788 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-
அம்மா அவர்களின் வழியினை பின்பற்றி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அம்மா நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும், விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறப்பு குறைத்தீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அம்மா அவர்கள் தொடங்கிய சமூக பாதுகாப்பு திட்டங்களை தொடர்ந்து மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை தேடி அரசே முன்வந்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சிறப்பு குறைத்தீர்க்கும் திட்டத்தினை முதலமைச்சர் அறிவித்தார். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 25.08.2019 முதல் 31.08.2019 வரை 6 நாட்களில் கிராமங்கள், நகரங்கள் அனைத்து பகுதிகளிலும் 342 சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு 25,861 மனுக்கள் பெறப்பட்டது.
தகுதியான 13,178 மனுக்கள் ஒரே மாதத்திற்குள் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் மக்கள் நலனில் விரைந்து செயல்படும் அரசு நம் அரசு. திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பி விண்ணப்பித்தாலும் உடனடியாக மாற்றம் செய்து தரப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.