தற்போதைய செய்திகள்

10,832 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர்கள் வழங்கினர்

நாமக்கல்:-

நாமக்கல் மாவட்டத்தில் 11,832 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், கொங்கு வேளாளர் சமுதாய கூடம், சேந்தமங்கலம், வசந்த மஹால் திருமண மண்டபம், நாமக்கல் கொங்கு வேளாளர் திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. சேந்தமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும், சேந்தமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன், நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாமக்கல் நகர கழக செயலாளரும், தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களையும் சேர்த்து மொத்தம் 10,832 பயனாளிகளுக்கு ரூ.21.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் பிற மாவட்டங்களை காட்டிலும் சாலை வசதிகள் அனைத்து பகுதிகளிலும் மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் உழைக்கும் மகளிருக்கு ரூ.25,000 மானியம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவிகித மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து 3 ஆண்டு காலமாக வருடத்திற்கு 1 லட்சம் இருசக்கர வாகனங்களை வழங்கி வருகிறார்.

ராசிபுரம் நகராட்சி பகுதியில் கழிவுநீர் சாலை ஓரங்களில் தேங்காத வகையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, தார்சாலை அமைத்து போக்குவரத்து சீர்செய்யப்படும். பல்வேறு பகுதிகளில் தார்சாலைகள் மற்றும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. ராசிபுரம் நகராட்சி மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த, முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆய்வு பணிகள் முடிவுற்றவுடன் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் திட்டத்தினை துவக்கி உள்ளார்.

மழை காலத்தில் பெய்கின்ற மழைநீரை முழுமையாக சேமிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தை அறிவித்தார்.் அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு அவற்றில் மழைநீர் சேமிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது, நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும்.

நாமக்கல் மாவட்டம் தொழில் வளர்ச்சி பெற்று வரும் மாவட்டம் என்பதால் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதால், குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சினையை போக்கும் வகையில் அம்மா அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜேடர்பாளையத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 4 மாத காலத்திற்குள் பணிகள் முடிவு பெறவுள்ளது. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து 2 ஏரிகளை தூர்வாரி அவற்றை சுற்றுலாத் தலமாக உருவாக்கியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்திற்கு தற்போது உள்ள கல்வி மாவட்டம் என்ற பெயர் தொடர்ந்து நீடிக்கும் வகையில் முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு 1 சட்டக் கல்லூரியையும், உயர்தர சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவமனையுடன் சேர்த்து மருத்துவக் கல்லூரியையும் ஒதுக்கீடு செய்துள்ளார். இதனால் பொதுமக்கள் சிகிச்சை பெற சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை. குமாரபாளையம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் அரசு கலை கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலுவதற்காக வேறு எந்த மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

பின்னர், நாமக்கல் பூங்கா சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும் நாமக்கல்- சேலம் சாலையை ரூ.17 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலையாக மேம்பாடு செய்வதற்கும், நாமக்கல் துறையூர் சாலை ரூ.11 கோடி மதிப்பீட்டில் கொசவம்பட்டியிலிருந்து கூலிப்பட்டி வரை இருபுறமும் வடிகால் வசதியுடன் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கும், நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலைகளை மேம்பாடு செய்வதற்கும் அமைச்சர்கள் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் எஸ்.என்.பாலசுப்பிரமணியன், நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான கே.பி.எஸ்.சுரேஷ்குமார், நாமக்கல் ஆவின் தலைவர் ஆர்.ஆர்.ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.