தற்போதைய செய்திகள்

தென்மாதிமங்கலத்தில் அரசு மகளிர் கல்லூரி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலை:-

தென்மாதிமங்கலத்தில் விரைவில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு ரூ.10 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் 2148 பயனாளிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:- 

தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தற்போது முதியோர் உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கலசப்பாக்கம் தொகுதியில் மட்டும் சுமார் ரூ.7 கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செண்பகத்தோப்பு அணைக்கு மதகுகள் அமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் பணிகள் நிறைவடைந்து செண்பகத்தோப்பு அணையில் முழு கொள்ளளவு தண்ணீரை சேமிக்க வழிவகை செய்யப்படும். விரைவில் தென்மாதிமங்கலம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மகளிர் அரசு கலைக்கல்லூரி நிறுவப்படும். இதற்கான அறிவிப்பினை முதல்வர் விரைவிலேயே வெளியிட இருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.