தமிழகம்

ஆலங்குளம், சங்கரன்கோவிலில் புதிய அரசு கலை கல்லூரிகள் – முதலமைச்சர் அறிவிப்பு

திருநெல்வேலி:-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

தென்காசி மாவட்டம் சரங்கரன்கோவிலில் இரு பாலரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.8.60 கோடியில் அமைக்கப்படும். ஆலங்குளத்தில் ரூ.9.13 கோடியில் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். மழை நீரை முறையாக சேமித்து பாசன பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தென்காசி மாவட்டத்தில் உள்ள சித்தாறு, உபவடி நிலத்தில் ரூ.22.65 கோடியில் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் ஆகிய ஒன்றியங்களில் 6000 ஹெக்டேர் பாசன நிலங்கள் பயனடையும் வண்ணம் நீர்ப்பாசன கட்டமைப்பு பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

கடையநல்லூர் வட்டம் சிந்தாமணி கிராமத்தில் கோட்டைமலையாற்றின் குறுக்கே ரூ.1.71 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும். கடையநல்லூர் வட்டம் சிந்தாமணி கிராமம் கோட்டைமலையாற்றின் குறுக்கே ரூ.2.50 கோடியில் படுகை அணை அமைத்து தண்ணீர் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்படும். இம்மாவட்ட குடிநீர் தேவைகளை மேலும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் திருவேங்கடம் பேரூராட்சிகளுக்கான
கூட்டு குடிநீர் திட்டம் ரூ.147 கோடி மதிப்பீட்டிலும், ஆலங்குளம், சங்கரன்கோவில் ஒன்றியங்களை சேர்ந்த 147 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.31.32 கோடி மதிப்பீட்டிலும், கீழப்பாவூர் உள்பட 3 ஒன்றியங்களை சேர்ந்த 163 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.47 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.