தற்போதைய செய்திகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்…

கோவை

கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார்பதி செட்டில்மென்ட் கிராமத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார்பதி சென்டில்மென்ட் கிராமத்தில் பெய்த தென்மேற்குப் பருவமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 பயனாளிகளுக்கு ரூ.5000 மதிப்பிலான அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மேலும், மழை வெள்ளத்தால் உயிரிழந்த ஒரு குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான காசோலையையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

தொடர்ந்து பெய்த கனமழையின் போது, காண்டூர் கால்வாய் (சம மட்ட கால்வாய்) 0 பாய்ண்ட் எனும் பகுதியில் மலைகளில் இருந்து கீழே விழுந்த மிகப்பெரிய பாறையானது கால்வாயின் நடுவே குறுக்கே விழுந்ததனால் கால்வாயில் அதிக நீர் வெளியேறி மிகப்பெரிய காற்றாட்டு வெள்ளம் போல் உருவானாதால், வேட்டைக்காரன்புதூர் குரூப், சேத்துமடை கிராமம், சர்க்கார்பதி மின்முகாம், நாகர் ஊற்று-2 எனும் மழைவாழ் மக்கள் வசித்து வரும் செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் வழிந்தேடி நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்நிகழ்வின் போது, சர்க்கார்பதி செட்டில்மென்ட் பகுதியில் உள்ள 22 வீடுகள், அடித்துச் செல்லப்பட்டன. உடனடியாக வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் துரிதமாக செயல்பட்டு 60 நபர்களை (ஆண்கள்-18, பெண்கள்-15, ஆண் மற்றும் பெண் குழந்தைகள் -27 ஆக மொத்த 60 நபர்கள்) சர்க்கார்பதி மின்முகாம் குடியிருப்பு பகுதியிலும் சர்க்கார்பதி மின்நிலையத்திலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக, தேவையான உணவு, போர்வை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 வீதம், மொத்தம் ரூ.2,20,000 வழங்கப்பட்டதுடன், தலா குடும்பத்திற்கு அரிசி-10 கிலோ, துவரம்பருப்பு 2 கிலோ, உப்பு 2 கிலோ, சர்க்கரை 2 கிலோ, எண்ணெய் 1 லிட்டர், பிரட் 1 பாக்கெட், குழம்பு பொடி 1 பாக்கெட், ரசப்பொடி 1 பாக்கெட், சாம்பார்பொடி 1 பாக்கெட், மிளகாய் வத்தல் 1 பாக்கெட், பாய் 2, போர்வை 3, கால்மிதி 1, சாப்பாட்டு தட்டு 5,

டீ தூள் 200 கிராம் பாக்கெட் 2, தீப்பெட்டி 2, மெழுகுவர்த்தி 2, கொசுவர்த்தி 2 பாக்கெட், சேலை 5, வேட்டி 5 போன்ற அத்யாவசிய பொருட்களும், கைலி 5, துண்டு 4, டிசர்ட்ஸ், பேண்ட், சுடிதார், குழந்தைகளுக்கான ஆடைகள், பம்ப் ஸ்டவ் 1, பிளாஸ்டிக் வாளி 1, பிளாஸ்டிக் மக் 1, சோப்பு டப்பா , சோப்பு 1, சில்வர் தட்டு 2, சில்வர் டம்ளர் 2, சில்வர் செம்பு 2, அன்னக்கரண்டி 1, குழம்பு கரண்டி 2, வடைசட்டி 1, டார்ச்லைட் 1 (பேட்டரி) போன்ற 37 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன. மேற்படி நபர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டிதரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, உதவி பொறியாளர் லீலா உட்பட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.