சேலம்

உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்வோம் – ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. சூளுரை

சேலம்

வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழக வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்வோம் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. சூளுரைத்தார்.

சேலம் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆவோசனை கூட்டம் தளவாய்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூ தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், ேசலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசியதாவது:-

அம்மாவின் மறைவிற்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் கழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அம்மா விட்டு சென்ற அனைத்து திட்டங்களையும் அப்படியே முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
அவர் மக்களுக்காக 20 மணி நேரம் உழைக்கிறார். மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று நேரடியாக தீர்வு காண்கின்றார். கடந்த எம்.பி. தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றது. தற்போது நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் கழகம் அமோக வெற்றி பெற்றது.

கழக அரசில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகம், மிதிவண்டி, காலணிகள், சீருடைகள், லேப்டாப், பஸ் பாஸ், வேலைக்கு செல்லும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதி உதவி ரூ.18 ஆயிரம், பிறந்த குழந்தைகளுக்கு அம்மா பரிசு பெட்டகம், விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்கள் சேவையை சிறப்பாக செய்து வருகிறது.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விலையில்லா வேஷ்டி- சேலைகள், அரிசி, ரூ.2000 பண உதவிகளை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி மக்கள் சேவை செய்யும் அரசாக கழக அரசு இருக்கிறது. இதே திமுகவாக இருந்தால் ரவுடியிசம், கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்ற மக்களுக்கு தொல்லை தரும் செயல்களில் ஈடுபடுவார்கள். எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் கழகம் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநகர பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், கன்னங்குறிச்சி பேரூர் கழக செயலாளர் வெங்கடாஜலம், ஊராட்சி செயலாளர்கள் கருணாகரன், அய்யனார், ஏழுமலை, ஜெகதீசன், சீனி, மெய்யப்பன் இளைஞரணி இணை செயலாளர் வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.