சிறப்பு செய்திகள்

தன்மானத்தை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காத அஞ்சா ெநஞ்சம் படைத்தவர் ராமசாமி படையாட்சியார்- முதலமைச்சர் புகழாரம்

சென்னை:-

மக்களின் நன்மைக்காக தனது சொத்துக்களையே தானம் செய்த வள்ளல் ராமசாமி படையாட்சியார். அவர் தன்மானத்தை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காத அஞ்சா ெநஞ்சம் படைத்தவர் என்று நினைவு மண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்தினை திறந்து வைத்து ஆற்றிய விழா பேருரை வருமாறு:- 

வாழும்போதே வரலாறாக வாழ்ந்த ராமசாமி படையாட்சியாரின் நினைவாக அன்னாருக்கு நினைவு மண்டபம் அமைத்து, அதன் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்றால், அந்த வளர்ச்சிக்கு உரமாக இருப்பது பல விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அப்படிப்பட்ட தியாகசீலர்களில் ஒருவர் தான் ராமசாமி படையாட்சியார்.

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் 1918-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் நாள் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, நாடு விடுதலை பெற அரும்பாடுபட்டவர். நாடு விடுதலை அடைந்த பின்னர், 1952-ம் ஆண்டு “தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி” என்ற ஒரு கட்சியை ராமசாமி படையாட்சியார் துவக்கினார். 1952-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இவரது உழைப்பாளர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட 19 வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தலிலும் இக்கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்ட ராமசாமி படையாட்சியார், 1954-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் அமைச்சராகப் பணிபுரிந்தவர். 1980 மற்றும் 1984-ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றினார்.

ஏழை, எளிய மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தங்களது உரிமையைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ராமசாமி படையாட்சியார் மிகவும் சமயோசிதமாகவும், நகைச்சுவையாகவும் அதே நேரம் தன் கருத்தை ஆணித்தரமாகவும் பேசுவதில் வல்லவர். தன்மானத்தை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காமல், அஞ்சாமல் பேசுபவர்.

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்”என்ற திருக்குறளுக்கு ஏற்ப, ராமசாமி படையாட்சியார் சொன்னதைச் செய்தார், செய்ய முடியும் என்பதை மட்டுமே சொன்னார்.காட்சிக்கு எளியவராகவும், மக்கள் அவரை எந்த நேரத்திலும் சந்திக்கக் கூடியவராகவும் திகழ்ந்த மக்கள் தலைவரான ராமசாமி படையாட்சியாரை பற்றி ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன்.

ராமசாமி படையாட்சியார் ஓய்வில்லாமல் ஒரு வாரம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து விட்டு மிகவும் களைப்புடன் வீடு திரும்பினார். அப்போது வாசலில் ஒரு குரல் – “ஐயாவைப் பார்க்க வேண்டும்”.குரலைக் கேட்டு வெளியே வந்த அவரது உதவியாளர், “ஐயா ரொம்ப களைப்பாக இருக்கிறார். தொந்தரவு செய்யாதே! காலையில் வந்து பார்” என்று அந்த நபரின் மேல் எரிந்து விழுந்தார்.

அவர்களுடைய பேச்சு உள்ளேயிருந்த படையாட்சியாரின் காதில் விழுந்தது. உடனே அவசரமாக வெளியே வந்தார். வாசலில் நின்று கொண்டிருக்கும் மனிதரை உள்ளே அழைத்து, அவரை உட்கார வைத்து, அவருடைய கோரிக்கையைப் பொறுமையுடன் கேட்டு ஆவன செய்வதாக கூறி மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தார்”.அந்த நபர் தன்னை சந்தித்து விட்ட திருப்தியில் சந்தோஷத்துடன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த அவர், தனது உதவியாளரை அழைத்தார்.

“உனக்கு கொஞ்சமாவது யோசனை இருக்கிறதா? அந்த நபர் வெளியூரிலிருந்து என்னை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். இந்த நேரத்தில் என்னை அவர் சந்திக்காமல் காலையில் சந்திப்பதாக இருந்தால், இரவு தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் எவ்வளவு செலவாகும் என்று யோசித்துப் பார்த்தாயா? அதற்கு அவரிடம் போதுமான பணம் இருக்குமா?” என்று கேட்டார்.
“இப்போது அந்த நபர் என்னைச் சந்தித்துவிட்ட திருப்தியில் எவ்வளவு நேரமானாலும் தனது இல்லத்திற்கு போய் சேர்ந்து விடுவார்! இனிமேல் இந்த மாதிரியான தவறை செய்யாதே! யார் வந்தாலும் எந்த நேரத்தில் வந்தாலும், எனக்கு தெரிவிக்க வேண்டும்” என்று உரிமையுடன் தனது உதவியாளரைக் கடிந்து கொண்டார்.

இந்த சம்பவத்திலிருந்து ராமசாமி படையாட்சியார், மக்களை அணுகிய விதத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
உதவி வேண்டும் என்று யார் கேட்டுப் போனாலும், அவர்களுடைய குறையை நிவர்த்தி செய்கின்ற ஒரு மாமனிதராக படையாட்சியார் திகழ்ந்தார். “வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது” என்ற ஆன்றோர் வாக்கிற்கேற்ப, பல்வேறு நன்மை பயக்கும் செயல்களை, எந்தவித ஒளிமறைவுமின்றி மக்களுக்காக தனது சொந்தப் பணத்திலிருந்து செயல்படுத்தியவர்தான், ராமசாமி படையாட்சியார். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

• கடலூரில் ரயில் இருப்புப் பாதை அமைப்பதற்கு தனது நிலத்தை தானமாக வழங்கினார்.
• கடலூர் பேருந்து நிலையம், மருத்துவமனை மற்றும் ஐ.டி.ஐ. அமைப்பதற்கு தனது நிலங்களை வழங்கி பெருமைபடுத்தியவர் ராமசாமி படையாட்சியார்.

• தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அதுபோல, ராமசாமி படையாட்சியாரின் சந்ததியினர், தனது தந்தையை விட அதிகமாக தற்போது உள்ள பேருந்து நிலையத்திற்கு தகுந்த வழியில்லாத காரணத்தினால், சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தை தானமாக அளித்துள்ளார்கள். இதை நினைக்கும்போது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.

• வன்னியர் குல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக “ஓராசிரியர் வேலை” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன்படி கிட்டத்தட்ட ஒரு கிராமத்தில் 20 மாணவர்களுக்கு மேல் இருந்தும், பள்ளிக்கு செல்ல முடியாமல் இருந்தால், பஞ்சாயத்து கட்டடத்தில் ஆரம்பப் பள்ளிப் பாடத்தை சொல்லித் தர வேண்டும் என்றும், அந்த ஆசிரியர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகமே ஊதியம் தர வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த ஓராசிரியர் பள்ளியில் படித்த மாணவர்கள் தான் தமிழ்நாட்டில் பல்வேறு பதவிகளில் பொறுப்புள்ள அதிகாரிகளாக உருவெடுத்தனர்.

அவர் ஆற்றிய பணிகளை சிறப்பிக்கும் வகையில், ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று நான் 29.6.2018 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தேன். அதன்படி அன்னாரது பிறந்த நாள் விழா அரசால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

“தியாகிகளான தலைவர்களாலே, சுதந்திரம் என்பதை அடைந்தோமே! ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன்தரச் செய்வோமே! ஊருக்கு உழைச்சாலே, ஏழை உரிமையை மதிச்சாலே பெருமைகள் தேடி வரும்”
என்ற புரட்சித்தலைவரின் பாடலுக்கு ஏற்ப, நாட்டுக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் பாடுபட்ட ராமசாமி படையாட்சியார் பணிகளை மேலும் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 19.7.2019 அன்று அன்னாரது “திருவுருவப் படம்” என்னால் திறந்து வைக்கப்பட்டு, பெருமைப்படுத்தப்பட்டது.

அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வன்னியர்குல சான்றோர் பெருமக்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ராமசாமி படையாட்சியாரின் பெருமைக்கும், புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், அவர் பிறந்த கடலூர் மாவட்டத்தில் அரசு சார்பாக நினைவு மண்டபமும், அந்த நினைவு மண்டபத்தில் அவரது முழு உருவச் சிலையும் அமைக்கப்படும் என்று 19.7.2018 அன்று மேட்டூரில் நடைபெற்ற ஒரு விழாவில் நான் அறிவித்தேன்.

இரண்டே மாதத்தில் அதனை செயல்படுத்தும் விதமாக, கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் அமைக்க 1.5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கி, 14.9.2018 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இந்த மண்டபத்தினை அமைக்கும் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, இங்கு நான் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1980-ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டினை 31 விழுக்காட்டிலிருந்து
50 விழுக்காடாக உயர்த்தினார். அது முதல் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீடு உட்பட 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்திட சமூக நீதி காத்த வீராங்கனை அம்மா அவர்கள். 1993-ம் ஆண்டு சட்டம் இயற்றி அதனை அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து, அரசியலமைப்பு பாதுகாப்பு பெற்றுத் தந்தார்.

சமூக நீதிக்கு ஆபத்து வரும் நேரங்களில் எல்லாம் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து, அதனை களைய உரிய நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு, அம்மாவின் அரசுதான் என்பதை இங்கே பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
வாக்குறுதி கொடுத்ததோடு மட்டும் நிற்காமல், அதனை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதை பலமுறை நிரூபித்தும் காட்டியிருக்கிறோம்.

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரிடம் பயிற்சி பெற்ற நாங்கள், “சொன்னதைச் செய்வோம், சொல்வதைத்தான் செய்வோம்” என்ற கொள்கையின் அடிப்படையில், செயல்பட்டு வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும், அம்மாவின் அரசும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை வழங்கி, தமிழ்நாட்டை ஒரு முன்னோடி மாநிலமாக்க தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “யாருமே கேட்காமல் நான் அறிவித்தேன்” என்று குறிப்பிட்டார். அது உண்மை தான். சட்டமன்றத்திலே பலருடைய படங்கள் இருந்தன. நான் பார்க்கின்றபொழுதெல்லாம் இவ்வளவு பெரிய சமுதாயத்தினுடைய தலைவர் படம் இல்லையே என்று எண்ணி, உடனடியாக சட்டமன்றத்திற்குள்ளே இந்த மிகப் பெரும்பான்மையான சமுதாயத்தினுடைய தலைவர் படம் இருக்க வேண்டுமென்று எண்ணி மரியாதைக்குரிய துணை முதலமைச்சரிடத்திலும், எங்களுடைய வன்னியர் குல அமைச்சர்கள் சி.வி.சண்மும், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், துரைக்கண்ணு, கே.சி.வீரமணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரிடமும் கலந்து பேசி அங்கு முழுவுருவ படம் ஒன்றை நாங்கள் திறந்து வைத்திருக்கிறோம், அந்த மக்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, ராமசாமி படையாட்சியார் இடஒதுக்கீடுக்காகப் போராடிய தலைவர். சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர், சமூக நீதிக்காக போராடிய தலைவர். அப்படிப்பட்ட மாமனிதருக்கு இந்த காலகட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியோடு மணிமண்டபத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கு உங்கள் சார்பாக ஆண்டவனுக்கும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ பேர் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், இறக்கிறார்கள். ஆனால், சமூகத்திற்காக பாடுபவர்கள் ஒரு சிலர் தான். அப்படிப்பட்ட ஒரு சிலரை நாம் கண்டு அவர்களுக்கு புகழ் சேர்த்தால் தான் இதற்குப் பின்னால் வருகின்ற சமுதாயம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும். அதற்காக இப்படிப்பட்ட தலைவர்களுக்கு புகழ் சேர்ப்பதற்காக இந்த மணிமண்டபத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலத்திலும் சரி, அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு எங்கள் ஆட்சிக் காலத்திலும் சரி, சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள், சமூக நீதி காத்தவர்கள், மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தியாகிகளுக்கு மணிமண்டபங்கள் அமைத்திருக்கிறோம், சிலைகள் அமைத்திருக்கிறோம்.

அந்த வகையில், ஒரு வரலாற்றைப் படைக்கின்ற அளவிற்கு இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சில கோரிக்கைகளை வைத்தார்கள். அந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது.

அம்மாவின் அரசு உடனடியாக இந்தச் சமுதாய மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்யும், செய்யும் என்று இந்த நேரத்தில் தெரிவித்து, நாட்டுக்காக, விடுதலைக்காக, சமூக நீதிக்காக, மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் ராமசாமி படையாட்சியாரின் நினைவு மண்டபத்தினை திறந்து வைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இந்தக் கடலூர் மாவட்டத்தில் மிகத் திரளாக குழுமி இந்த நிகழ்ச்சியிலே பங்கு பெற்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற முன்னோடி தலைவர்களுக்கும், வருகை தந்திருக்கின்ற பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கும், பல்வேறு வகுப்பைச் சேர்ந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.