தற்போதைய செய்திகள்

25 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.63 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய வட்டங்களில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 25,016 பயனாளிகளுக்கு ரூ.62.82 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள். பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை. 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை திட்டம். தாய் சேய் நலன் காக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மகப்பேறு நிதி உதவித் திட்டம். பெண்களின் சுகாதாரத்தினை பேணும் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18,000 வழங்கும் திட்டம். கிராமப்புற ஏழை, எளிய தாய்மார்களின் பொருளாதார நிலையினை உயர்த்திடும் வகையில் விலையில்லா கறவைப் பசுமாடு மற்றும் விலையில்லா 4 வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம். அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள் அடங்கிய “அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்” வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாட்டிலேயே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சமமாக பெறும் ஒரே மாவட்டமாகும். இதனால் மாநிலத்திலேயே அதிகமான பரப்பில் மானாவாரி சாகுபடி செய்யும் மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2017-2018-ம் ஆண்டு சுமார் 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்து டெல்டா மாவட்டங்களை காட்டிலும் அதிகபட்ச அரிசி உற்பத்தி செய்து பெருமை சேர்த்துள்ளது. இந்த 2019-ம் ஆண்டு காரீப் பருவத்தில் சராசரியை விட அதிக அளவில் பெறப்பட்ட மழையின் காரணமாக 25,000 ஹெக்டேரில் பயிரிடப்படும் மணிலா பயிரின் பரப்பு தற்போது 40,000 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பொதுப்பணித் துறையின், நீர்வள ஆதாரத் துறைக்குட்பட்ட ஏரிகளை அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் சிறப்பான முறையில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 32 ஏரிகள், 5 அணைக்கட்டுகள் மொத்தம் ரூ.16.07 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் 12,213 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

மேலும், முதலமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் குடிமராமத்து திட்டம் 2019-2020-ன் கீழ் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மை இயக்கத்தின் சார்பாக கிராமங்கள் தோறும் சிறுபாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-2020-ம் ஆண்டிற்கு 429 சிறுபாசன ஏரிகள், 1094 குளங்கள் மற்றும் ஊரணிகள் புனரமைக்கும் பணிகள் ரூ.32.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்களின் நலன் பேணி காக்கின்ற அரசு. ஏழை, எளிய மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டுமென்பதற்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.