தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக் தடையை மீறினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை

ஈரோடு

பிளாஸ்டிக் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் சிங்கம்பேட்டை, குருவ ரெட்டியூர், கன்னப் பள்ளி, பட்லூர் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டை பொறுத்தவரை வெற்றிடம் இல்லை. ரஜினி அடிக்கடி இமயமலைக்கு ஓடி விடுகிறார். கமலஹாசன் நாடோடியாக திரிந்து கொண்டிருக்கிறார். வெற்றிடம் என எந்த அர்த்தத்தில் அவர் தெரிவித்தார் என தெரியவில்லை, தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அம்மாவின் ஆட்சியை விட வேறு யாரும் இதுவரை சிறந்த ஆட்சி கொடுக்கவில்லை.

இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட ரஜினி, கமல் இருவரும் எந்த ஒரு பதவிக்கும் வர முடியாது, படம் வெளியாகும்போது நாட்டு மக்களிடம் வந்து அள்ளி தருகிறேன் என்று கூறுவார்கள். ஆனால் நாட்டு மக்களின் பணத்தை பலகோடி அள்ளி சென்று விடுவார்கள். சீமான் கட்சி தொடங்கினார். கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். ஆனால் அவர்கள் டெபாசிட் வாங்க கூட மக்கள் யாரும் ஓட்டு போட வில்லை.

உயர் மின் கோபுரம் ஆகட்டும், எட்டு வழி சாலை திட்டம் ஆகட்டும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் தான் போராட்டத்தைை தூண்டி விடுகின்றனர். பவானியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான ஆய்வுகள் முடிவுற்று டெல்லியின் இறுதி முடிவுக்கு சென்றுள்ளதால் மத்திய அரசின் 50 சதவிகிதம்
மானியம் மற்றும் மாநில அரசின் 25 சதவிகித மான்யத் தொகையுடன் 4 அல்லது 5 மாதங்களில் தொடங்கப்படும். பவானி அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் திமுக செய்ததை போலவே இந்த முறையும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை புகாராக
கூறி வருவது ஏற்க தக்கதல்ல. கழகத்தை பொறுத்தவரை தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியாக இருப்பதால்தான் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளோம்.

திமுகவில் பெண்களுக்கான முக்கியத்துவம் எப்போதும் அதிகம் இருந்ததில்லை. நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சரை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி இல்லை பிளாஸ்டி தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலை கழிவுகளை நீர் நிலைகளில் கலப் போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் வி.எஸ்.சரவணபவா, ஒன்றிய துணை செயலாளர் எம்.லட்சுமணன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், ராஜேந்திரன், பட்லூர் சசி (எ) இளங்கோ, கேபிள் செல்வராஜ், .பேரவை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கவுந்தப்பாடி சிவக்குமார், அம்மாப்பேட்டை ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.