தற்போதைய செய்திகள்

திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் தொடக்க விழாவில் ரூ.100 கோடிக்கு நலத்திட்ட உதவி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

வேலூர்:-

திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் தொடக்க விழாவில் ரூ.100 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஏழை எளியவர்கள் மாணவர்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றி வைக்கும் வகையில்
மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் பொற்கரங்களால் தொடங்கி வைக்கும்
திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் தொடக்க விழா தமிழக வரலாற்றில் இடம்பெறும்
என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் தொடக்கவிழா ஆய்வுக் கூட்டத்தில் பேசினார்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றும், நிர்வாக வசதிக்காகவும் வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய மாவட்டங்களை
வருகின்ற 28-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வருகை தந்து தொடங்கி வைக்கின்றனர்.

இதையொட்டி புதிய மாவட்டங்கள் தொடக்க விழா ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூர் தொன்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அவர் பேசியதாவது:- 

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தாயுள்ளத்தோடு திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள்,
வாணியம்பாடி, குடியாத்தம், அரக்கோணம் ஆகிய 3 புதிய வருவாய் கோட்டங்களை உருவாக்கி ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். வருகின்ற 28-ந் தேதி திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை முதலமைச்சர் தனது பொற்கரங்களால் தொடங்கி வைத்து ரூ.100 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 32 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக வேலூர் மாவட்டம் திகழ்ந்தது. அதுபோன்று திருப்பத்தூர், ராணிப்பேட்டை தொடக்கவிழா அமைவது உறுதி. திருப்பத்தூர், ராணிப்பேட்டை தொடக்கவிழா ஏழை எளியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் வியாபாரிகள் மாணவ-மாணவிகள் ஆகியோரின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றி வைக்கும் வகையில் தமிழக வரலாற்றில் இடம்பெறும்.

வரும் காலங்களில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக சென்று சேர புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர்.அம்மா அவர்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்றி வருகின்றனர். தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட போது ரூ.90 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதையும் மிஞ்சும் வகையில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை தொடக்கவிழாவில் முதலமைச்சர் வழங்கும் நலத்திட்ட உதவிகள் ரூ.100 கோடி அளவில் இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.