தமிழகம்

1133 அங்கன்வாடி மைய கட்டடங்கள் ரூ.22.66 கோடி செலவில் சீரமைப்பு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை

1133 அங்கன்வாடி மைய கட்டடங்கள் ரூ.22.66 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில்  தமிழ்நாடு சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியதாவது:-

அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயில வருகை புரியும் குழந்தைகளுக்கு 2012-2013 மற்றும் 2013-2014-ம் ஆண்டு முதல் இரண்டு இணை இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது. இத்திட்டத்தினை தர்மபுரி, நாமக்கல், இராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள, அங்கன்வாடி மையங்களுக்கு, 6.51 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் சொந்த கட்டடங்களில் செயல்படும் அங்கன்வாடி மைய கட்டடங்களில் ஏற்படும் பழுதுகளை சீர்படுத்த நடப்பாண்டில் 1,133 அங்கன்வாடி மையக் கட்டடங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 22.66 கோடி ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அங்கன்வாடி மையங்களை தூய்மையாக பராமரிக்கவும், அங்கன்வாடி மைய பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்களை உடனே வாங்குவதற்கும், சிறிய வகையிலான கட்டடப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டும், ஓர் அங்கன்வாடி மையத்திற்கு 3,000 ரூபாய் வீதம் 38,489 அங்கன்வாடி மையங்களுக்கு வருடாந்திர பராமரிப்பு நிதி சுமார் 11.55 கோடி ரூபாய் வழங்கப்படும்.

10 ஆயிரத்து 888 அங்கன்வாடி மையங்களுக்கு நாற்காலி, இரும்பு அலமாரி, நீர்வடிகலன் போன்ற அறைகலன்கள் 10.59 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களுக்கு வருகின்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான உடல் உபாதைகள், காய்ச்சல், பேதி, காயம், தோல்தொற்று ஆகியவற்றை சமாளிக்கும் வகையில், எளிதாக பயன்படுத்தக்கூடிய மருத்துவ பொருள் அடங்கிய மருத்துவப் பெட்டியும், கைத்துண்டு, சீப்பு, நகவெட்டி மற்றும் சோப்பு அடங்கிய சுகாதாரப் பெட்டியும், 31 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நடப்பாண்டில் 7.35 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டில் 5,970 சத்துணவு மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் சுமார் 8.63 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைத்து, காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்த ஏதுவாக தோட்டக் கலைத் துறையின் உதவியுடன் காய்கறித் தோட்டம் அமைக்க, முதற்கட்டமாக ஒரு சத்துணவு மையத்திற்கு 5,000 ரூபாய் வீதம், 9,915 சத்துணவு மையங்களில் சுமார் 4.96 கோடி ரூபாய் செலவில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும்.

வறுமையாலும், பல்வேறு கடினமான சூழ்நிலைகளாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து பராமரிப்பதற்கு, அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லம் ராமநாதபுரம் நகரத்தில் 70 பெண் குழந்தைகளுடன், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இந்த இல்லத்திற்கு, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட புதிய கட்டடம் 1,614 சதுர மீட்டர் பரப்பளவில் 5.28 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

சென்னை, கெல்லீஸில், அரசு கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகின்றது. இந்த இல்லத்தில் உள்ள 150 சிறார்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்விற்குரிய பயிற்சிகள் வழங்கிட தேவையான, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் கொண்ட கூடுதல் கட்டடங்கள், 4.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.தற்போது, அரசு கூர்நோக்கு இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களை ஒவ்வொரு விசாரணை நாளிலும் சம்மந்தப்பட்ட மாவட்ட இளைஞர் நீதிக் குழுமங்களுக்கு அழைத்துச் சென்று வர வேண்டியுள்ளது. ஏற்கனவே, 8 மாவட்டங்களில் இளைஞர் நீதிக் குழுமங்கள் கூர்நோக்கு இல்லங்களுடன் இணைக்கப்பட்டு, கூர்நோக்கு இல்ல சிறார்களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது எஞ்சியுள்ள தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கடலூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலுள்ள 6 அரசு கூர்நோக்கு இல்லங்களை, அவற்றுடன் தொடர்புடைய 16 மாவட்டங்களிலுள்ள இளைஞர் நீதிக் குழுமங்களுடனும் காணொலிக் காட்சி மூலம் இணைக்கும் பணிகள் எல்காட் நிறுவனம் மூலம் 2.6 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.