சிறப்பு செய்திகள்

ராமசாமி படையாட்சியாருக்கு ரூ.2.15 கோடியில் நினைவு மண்டபம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

கடலூர்

சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 1.70 ஏக்கரில் ரூ.2.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில் அவரது 8 அடி உயர வெண்கல சிலையும், மண்டபத்தின் அருகே நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. ராமசாமி படையாட்சியார் கடலூரில் 16.9.1918-ம் ஆண்டு பிறந்தவர். அவர் கல்லூரி படிப்பை முடித்ததும் முதன்முதலாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது உழைப்பாளர் கட்சி என்ற கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். அத்தேர்தலில் 19 சட்டமன்ற உறுப்பினர்களும், 4 மக்களவை உறுப்பினர்களும் அவரது கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல் சட்டப்பேரவை தேர்தல் முடிவுற்றதும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு போதிய பெரும்பான்மை கிடைக்காததால் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் ஆதரவுடன் ராஜாஜியை முதலமைச்சராக கொண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் காமராஜர் ஆட்சியில் ராமசாமி படையாட்சியார் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார்.

பின்னர் திண்டிவனம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். வன்னிய குல மக்களின் முன்னேற்றத்திற்காக ராமசாமி படையாட்சியார் அரும்பணியாற்றி இருக்கிறார். அவரது சேவையை பாராட்டும் வகையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையிலேயே அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த மணிமண்டபம் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது திருக்கரங்களால் திறந்து வைத்தார்.

இந்த மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ராமசாமி படையாட்சியாரின் திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவருவ படத்திற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், இரா.துரைக்கண்ணு, கே.சி.வீரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், அரசின் பல்வேறு துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நன்றி கூறினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர், டாக்டர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், கழக நிர்வாகிகள், மாவட்ட மகளிரணியினர், நகர செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உற்சாக வரவேற்பு

கடலூரில் ராமசாமி படையாட்சியாரின் நினைவு மண்டபம் திறப்பு விழாவுக்கு வரும் வழியில் புதுச்சேரியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பெரும் திரளான கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுவை 100 அடி சாலையில் உள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ சிலைக்கு இரு தலைவர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இருவருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளித்தனர். புதுவை மரப்பாலத்தில் மேளதாளம் முழங்க முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் புதுவை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் பூரண கும்ப மரியாதை கொடுத்து எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்றனர்.