இந்தியா மற்றவை

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா

மகாராஷ்டிர அரசியலில் மேலும் ஒரு எதிர்பாராத திருப்பமாக, முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், துணை முதலமைச்சராக இருந்த அஜித்பவார் ராஜினாமாவைத் தொடர்ந்து வேறு வழியின்றி தேவேந்திர பட்னவிசும் பதவி விலகியுள்ளார்.  

மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா அமர்வு, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு புதிய எம்எல்ஏக்களுக்கு நாளை அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இந்த நடைமுறைகளை நாளை மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்படக் கூடாது என்றும், அதை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதிக்கப்படும் சூழலில், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடைபெற வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதைத் தடுக்க உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது சிறந்த வழிமுறையாக இருக்கும் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கூட்டணி கட்சிகள் 162 எம்எல்ஏக்களை தங்கள் வசம் வைத்துள்ள நிலையில், 105 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்றுள்ள பாஜக பெரும்பான்மையை எப்படி நிரூபிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் ஏதேனும் எதிர்பாராத திருப்பம் நிகழலாம் என்றும்கூட கருதப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே துணை முதலமைச்சர் பதவியிலிருந்து அஜித் பவார் விலகினார். அவருக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 24 பேருடன் சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என கருதிய பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்நவிஸ், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் அஜித் பவார், ஆதரவுக் கடிதத்துடன் தங்களை அணுகியதால் ஆட்சி அமைத்ததாகவும், ஆனால் அவர் திடீரென ஆதரவை தொடர முடியாது என்று கூறிவிட்டதாலும், தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதாலும், ராஜினாமா செய்ய உள்ளதாக பட்னாவிஸ் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற தேவேந்திர பட்நவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். இரண்டாவது முறையாக முறையாக முதலமைச்சராக பதவியேற்று 4 நாட்களில் தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.