சிறப்பு செய்திகள்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அமெரிக்கா, லண்டன் பயணம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்…

மதுரை:-

தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அமெரிக்கா – லண்டன் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களை சந்திக்க முதல்வர் அமெரிக்கா, லண்டன் செல்கிறார் என்றும் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் முன்னோடி மாநிலமாக திகழும் என்றும் மதுரையில் நடைபெற்ற உணவுப்பொருள் மற்றும் சமையல் உபகரண வர்த்தக பொருட்காட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

தமிழ்நாடு சேம்பர் ஆப் பவுண்டேசன் நடத்தும் வைப்ரண்ட் தமிழ்நாடு என்ற பெயரில் கடந்த ஆண்டு மாபெரும் உணவுப்பொருள் மற்றும் சமையல் வர்த்தக கண்காட்சி நடத்தினர். அதனையொட்டி இந்த ஆண்டும் மதுரை வேலம்மள் ஜடா ஸ்கட்டர், வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த பொருட்காட்சியை வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மத்திய உணவு பதனீட்டுத் துறை அமைச்சர் ராமேஸ்வர்டெலி, தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜசேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், பா.நீதிபதி, பெரியபுள்ளான்(எ)செல்வம், வைபவ் பிராண்ட் பொருட்காட்சி சங்கத்தலைவர் கே.திருப்பதிராஜன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத்தலைவர் ரத்தினவேல், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தமிழ்நாடு சேம்பர் ஆப் காமஸ் 95 ஆண்டு கால வரலாறு பெற்றது மதுரையின் வளர்ச்சிக்கு சேம்பர் ஆப் காமஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் மதுரையில் உயர்நீதிமன்ற கிளை வருவதற்கும், எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கும் முதலில் விதை போட்டவர்கள் இவர்கள் தான். உலகளவில் நம்மீது பார்வை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சிறப்பான முறையில் கண்காட்சி நடத்தினர். அதில் பல்வேறு வெளிநாட்டினர் தங்கள் நாட்டிற்கு பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்தனர். இதன் மதிப்பு ஏறத்தாழ ரூ.172 கோடி ஆகும்.

அது மட்டுமல்லாது நமது நாட்டின் பொருட்களின் ஏற்றுமதி 2018-2019ம் ஆண்டில் 331 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 23 லட்சம் கோடியை எட்டியுள்ளது. நமது நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக 20 சதவிகித வளர்ச்சியை கண்டு வரும் வேளாண் பொருட்காட்சியின் ஏற்றுமதி தற்போது 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி அளவிற்கு ஏறத்தாழ 37 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் நடைபெறுகிறது.

இதனையொட்டி 2022ம் ஆண்டில் 4 லட்சத்து 20 ஆயிரம். அதாவது 60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் அடுத்த சில ஆண்டுகளில் 7 லட்சம் கோடியாக அதாவது 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக உணவு பதனிடும் தொழிலுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்த்தியுள்ளது. உலகிற்கே உணவு அளிப்பதில் நமது நாடு குறிப்பாக நமது தமிழகம் முதல் நிலையை எட்டும். குறிப்பாக உணவு பதனிடு தொழிலுக்கு பல்வேறு சலுகைகளை முதலமைச்சர் அளித்துள்ளார்.

தற்போது இந்த பொருட்காட்சியில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் மற்றும் சமையல் உபகரணங்களின் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளுக்கும் மேற்பட்ட வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

அதேபோல் கோவை, மதுரை, சேலம் ஆகிய 3 இடங்களில் பஸ்போர்ட் விரைவில் வர உள்ளது. இந்த பஸ்போர்ட் அமைக்க 60 ஏக்கர் நிலம் தேவை மதுரையில் இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு திட்ட அறிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வர்த்தக மையம் போல் மதுரையில் வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். நிச்சயம் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தற்போது முதலமைச்சர் உலகில் உள்ள முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில்துறைகளை உருவாக்க அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழகம் வளர்ச்சிப்பாதையில் முன்னோடி மாநிலமாக திகழும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.