தற்போதைய செய்திகள்

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடி – அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்

தருமபுரி:-

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு வட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர்க்கும் திட்டத்தின் கீழ் 3,530 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 66 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 7 வட்டங்களில் சுமார் 50 ஆயிரத்து 712 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் தான் இரண்டாவது கட்டமாக பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் வட்டங்களை சேர்ந்த 4504 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியே 98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம் ஆகிய வட்டத்தில் 4,031 பயனாளிகளுக்கு ரூ.39 கோடியே 81 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலும், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 4,715 பயனாளிகளுக்கு ரூ.43 கோடியே 85 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 17,205 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் என ரூ.155 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பின்படி தற்போது இந்தியாவில் உயர் கல்வி பயில சேர்வோர் எண்ணிக்கை 26.63 சதவீதமாக உள்ளது. இந்த சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் 30 சதவீதமாக அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோர் சதவீதம் 49 சதவீதமாக உயர்ந்த நிலையில் உள்ளது. உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது.

உலக அளவில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் 36 சதவீதமாக உள்ளனர். அனைவருக்கும் சமமான உயர்கல்வி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அனைவரும் உயர்கல்வி பெற்று வரும் காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக் கல்வியில் 14 வகையான விலையில்லா பொருட்களை மாணவர்களுக்கு வழங்கி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை சிறப்பாக அரசு நிறைவேற்றி வருகிறது. 2018-19-ம் கல்வியாண்டில் பயின்ற 12,261 மாணவ-மாணவிகளுக்கு ரூ.15 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்பிலான விலையில்லா மடிகணினிகள் தற்போது வழங்கப்படுகிறது.

2017 – 18-ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு விரைவில் மடிகணினிகள் வழங்கப்படும். மாணவர்களின் உயர்கல்விக்கு பயன்படும் வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மடிகணினிகள் வழங்கப்படும் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 72 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தமிழக அரசு சார்பில் தொடங்கப் பட்டுள்ளது.  இந்த மையங்களில் மொத்தம் 1355 குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தற்போது 4 செட் சீருடைகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.