சிறப்பு செய்திகள்

தடைகளை தகர்த்தெறிந்து திட்டங்களை நிறைவேற்றுவோம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

கோவை

அவதூறு பரப்பி மக்கள் நலத்திட்டங்களை தடுக்க தி.மு.க. முயற்சி செய்கிறது. யார் தடுத்தாலும் தடைகளை தகர்த்தெறிந்து திட்டங்களை நிறைவேற்றியே தீருவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை மாவட்டம், சுண்டக்காமுத்தூர் 89-வது வார்டு, கோவைபுதூர் 90-வது வார்டு ஆகிய இடங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இம்முகாம்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 696 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தமிழக மக்களின் நலனுக்காக முதலமைச்சரால், பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்து தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலம் காணாத வளர்ச்சித் திட்டங்களை கழக ஆட்சியில் செயல்படுத்தி வருகிறோம். மாவட்டம் முழுவதும் பல்வேறு பாலங்கள் கட்டபட்டுள்ளன. மேலும் அவினாசி ரோட்டில் 9.5 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது.

4 அரசு கலை கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.8 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்படவுள்ளது. கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை முற்றிலும் பூர்த்தி செய்யும் வகையில் 3 வது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 3 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தை தொடர்ந்து குறிச்சிகுளம் மேம்படுத்தப்படவுள்ளது. கோவை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து சிகிச்சைகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம், அரசு பொது மருத்துவமனை புதிய கட்டடங்களை தொடர்ந்து விரைவில் கோவை தெற்கு மண்டல அலுவலக புதிய கட்டிடம் திறக்கப்படவுள்ளது. கழக ஆட்சியில் உள்ளாட்சித்துறையில் 86 விருதுகளை பெற்றுள்ளோம். மகளிர் சுய தொழில் தொடங்க இதுவரை ரூ.57 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

கழக ஆட்சி மீது அவதூறு பரப்பி, மக்கள் நலத்திட்டங்களை தடுக்க திமுக முயற்சி செய்கிறது. யார் தடுத்தாலும் தடைகளை தகர்த்தெரிந்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியே தீருவோம். எங்களது மக்கள் பணி தொடரும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் வாக்கு வாங்கி சென்ற திமுகவினரை இன்று எங்கே என்று தேடவேண்டியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ஷ்ரவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, உதவி ஆணையர் ரவி, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, வட்டாட்சியர் (பேரூர்) ராதாகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர் வி.குலசேகரன், பகுதி கழக துணை செயலாளர் எஸ்.எம்.உசேன், இ.கே.பழனிசாமி, வார்டு செயலாளர்கள் எஸ்.டி.கதிரேசன், சுப்பிரமணி, தண்டபாணி மற்றும் ரவிநடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.