சிறப்பு செய்திகள்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசு மீது குறை கூறுவதா? ஸ்டாலினுக்கு துணை முதல்வர் கண்டனம்…

சென்னை:-

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசு மீது குறை கூறுகிறார் ஸ்டாலின் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடினார்.

சென்னையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து விட்டது. முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு வருவாய்த்துறை அமைச்சரை அங்கு அனுப்பி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதன்படி வருவாய்த்துறை அமைச்சர் அங்கு சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டார்.

அதேபோல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கு அனுப்பப்பட்டு அவர்கள் முன்னெரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். ஆனால் அலஞ்சியில் மட்டும் 91 செ.மீ. மழை பெய்தது யாரும் எதிர்பார்க்காதது. அப்படி இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு நிவாரண முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களை அங்கு தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது.இவ்வளவு செய்தும் கூட அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிர வேறு இல்லை.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.