சிறப்பு செய்திகள்

மேட்டூர் அணை நாளை திறப்பு : முதலமைச்சர் திறந்து வைக்கிறார்….

சென்னை:-

டெல்டா பகுதி விவசாய பெருங்குடி மக்களின் நலன் கருதி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை தண்ணீர் திறந்து விடுகிறார். இதனால் விவசாய பெருங்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை பொய்த்து விடாதா? தண்ணீர் திறந்து விட மாட்டாதா என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நேரத்தில் நல்லவர்கள் ஆட்சி செய்வதால் நாடு முழுவதும் நல்ல மழை பெய்து காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் 3 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணை கிடுகிடுவென உயர்ந்து மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்ற நேரத்தில் சில தீய சக்திகளோ ஆட்சியாளர்களுக்கு எல்லாம் சாதகமாகவே நடக்கிறது என்று வயிறெரிந்து கொண்டிருக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில் நல்ல மனம் படைத்த நமது முதலமைச்சர் நாளை மேட்டூர் அணையில் இருந்து விட இருக்கிறார். இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் காவேரி டெல்டா பகுதி நெற்களஞ்சியமாக விளங்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை நீர்ப்பாசனம். மேட்டூர் அணையை வழக்கமாக திறக்கும் நாளான ஜூன் 12-ந்தேதி அன்று போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் பாசனத்திற்காக நீர் திறக்க இயலாத நிலை ஏற்பட்டது.

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து, தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி விட்டதாலும், நீர்வரத்தும் விநாடிக்கு 2.40 லட்சம் கன அடியாக இருப்பதாலும், அணையின் நீர் இருப்பு 62 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது.

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது என்பதையும், காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டும், இனி வரும் மாதங்களில் கர்நாடக நீர்த் தேக்கங்களிலிருந்து கிடைக்கக் கூடிய நீரினை எதிர்நோக்கியும், விவசாயிகளின் நீர்த் தேவையினையும், அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ந்தேதி காவேரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், நானே நாளை நேரில் சென்று மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளேன்.

இதன் மூலம், காவேரி மற்றும் காவேரி படுகையில் உள்ள ஏறக்குறைய 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு, அதன் வாயிலாக பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் உயர்வடைந்து, குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்த இயலும். வேளாண் பெருமக்கள் நீரினை அனைத்து கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் வாயிலாக நீர் மேலாண்மை செய்து பாசனத்திற்கு பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.