இந்தியா மற்றவை

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மகாராஷ்டிர சட்டப்பேரவை, இடைக்கால சபாநாயகர் திலிப் பாட்டில் தலைமையில் இன்று கூடியது.

வந்தே மாதரம் இல்லாமல் கூட்டம் தொடங்கியிருப்பதாகவும், இது விதி மீறல் என்றும் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் விதிகளின்படி நடைபெறவில்லை என்றும், சபாநாயகரை தேர்ந்தெடுக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.
பட்னாவிஸ் கூறிய குற்றச்சாட்டுகளை இடைக்கால சபாநாயகர் ஏற்கவில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், 169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

288 எம்எல்ஏக்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணிக்கு 154 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர சில சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிபெற்ற பிறகு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தாம் சிவாஜி மற்றும் தமது பெற்றோர் பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்ததாகவும், இது விதி மீறல் என்றால், அதை தொடர்ந்து செய்வேன் என்றும் குறிப்பிட்டார்