தற்போதைய செய்திகள்

ஆளுமை திறமைமிக்க தலைவராக எடப்பாடியார் உயர்ந்து விட்டார் – நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி

சென்னை:-

தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாகவும், சரியான ஆளுமை இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியதை ஏற்க முடியாது. சாதாரண தொண்டனாக இருந்தவர் இன்று ஆளுமை திறமை மிக்க முதலமைச்சராகி இருக்கிறார் எடப்பாடியார் என்று ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா கூறியுள்ளார். நடிகைகளுக்கு ஓட்டு போட்ட காலம் மாறி விட்டது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மற்றும் சித்தூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ரெட்டப்பா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கு சென்று பொது மேலாளர் ஜான் தாமசை சந்தித்து நகரி ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு ெசய்ததற்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இப்பொழுது பலர் சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்துக் கொண்டு தலைவராகி விடலாம் என்று நினைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நடிகரை பார்த்து மக்கள் ஓட்டு போட்ட காலம் போய் விட்டது. இப்பொழுது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சிந்தித்து செயல்படுகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதவிக்கு வரும் முன்னர் பல பேருக்கு அவரை தெரியாது. ஒரு சாதாரண மனிதராகத்தான் இருந்தார். ஆனால் இன்று அ.இ.அ.தி.மு.க. கட்சியை ஒன்றிணைத்து மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு இணையாக போட்டியிடும் நிலைக்கு அவர் வளர்ந்துள்ளார். அவர் ஆளுமை மிக்க ஒரு முதலமைச்சராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் வெற்றிடம் நிலவுவதாகவும், சரியான ஆளுமை இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது ஏற்கக்கூடியது அல்ல. வெற்றிடம் இருந்தால் தமிழகத்தில் நிலையான ஆட்சியை நிலைநாட்டி இருக்க முடியாது.

இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.