சிறப்பு செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிகளை குவிப்போம் – எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சூளுரை

சென்னை:-

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றிபெற அயராது உழைத்திடுவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி கழக ஒருங்கிணைப்பாளர்கள், அமைச்சர்கள், கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் வங்கக் கடற்கரையில் துயில் கொள்ளும் புரட்சித்தலைவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். முதலில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் புரட்சித்தலைவரின் நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க அங்கு திரண்டிருந்த அனைவரும் அதை திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும், தாய்க்குலத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், பொற்கால ஆட்சியை நடத்திய பொன்மனச்செம்மல், சத்துணவு தந்த சரித்திரநாயகர், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய மகத்தான மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, உயிரினும் மேலாகக் கருதி, காப்போம், காப்போம் என உறுதி ஏற்கிறோம்.

தமிழ்நாட்டில், உழைக்கும் மக்களின் உரிமைகளையும், தாய்க்குலத்தின் பெருமைகளையும், சமத்துவக் கொள்கைகளையும், தன்னுடைய கலைப் பயணத்தாலும், அரசியல் பணிகளாலும், நல்லாட்சி சிறப்புகளாலும், ஓங்கி ஒலிக்கச் செய்தவர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.. மக்கள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையும், மக்களுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்த மக்கள் திலகம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் புகழ் மென்மேலும் உயர்ந்திடும் வண்ணம் கழகப் பணிகளை ஆற்றுவோம், ஆற்றுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆயிரம் காலத்துப் பயிராக நிலைத்து நின்று, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அரசியல் உரிமைகளையும், ஆட்சி அதிகாரத்தில் பங்கினையும் பெற்றுத் தருகின்ற, உண்மையான மக்களாட்சித் தத்துவத்தை, தனது அரசியல் கொள்கையாகக் கொண்டு பணியாற்றியவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.புரட்சித் தலைவரின் ஜனநாயகக் கொள்கைகளைக் கட்டிக் காத்து, தமிழ் நாட்டில், தனிப்பட்டவரின் ஆதிக்கமோ, தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆதிக்கமோ தலைதூக்குவதை முறியடித்து, ஜனநாயகப் பண்புகள் நிலைபெற்றிட,
ஓயாது உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

தந்தை பெரியாரின் சமூக மறுமலர்ச்சி கொள்கைகளையும், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளையும், தனது அயராத உழைப்பினால் மக்களிடம் கொண்டு சேர்த்த கொள்கைக் காவலர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். தான் தொடங்கி வைத்த, மக்கள் நலத் திருப்பணிகள் எந்நாளும் தொடர வேண்டும் என்பதற்காக, அந்தப் பணிகளுக்கு சிறப்பான செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, புரட்சித்தலைவி அம்மா என்னும் ஒப்பற்ற தலைமையை நம் கழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் கொடுத்துச் சென்ற கொடை வள்ளலின் எண்ணம் ஈடேறும் வகையில், கழகத் தலைமைக்கு விசுவாசமாகவும், கழக அரசுக்கு காவல் அரணாகவும் பணியாற்றுவோம், பணியாற்றுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.

தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டும். தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்;
தமிழ் மக்களின் உரிமைகளும், உணர்வுகளும், மதித்துப் போற்றப்பட வேண்டும் என்பதற்காக, பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தனது ஆட்சியையும் வழிநடத்திச் சென்றவர், எல்லோரும் கொண்டாடும் எங்கள் வீட்டுப் பிள்ளை, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.. அந்த மாபெரும் தலைவர் காட்டிய பாதையில் ஆட்சி நடத்தியவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். நம் இதயத்தில் நிறைந்திருக்கும் இருபெரும் தலைவர்களின் அடிச்சுவட்டில், இன்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அம்மா அவர்கள் ஏற்படுத்தித் தந்த கழக அரசும், மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் முழுமையாக வெற்றிபெறச் செய்திட, ஒற்றுமையாய் பணியாற்றுவோம், பணியாற்றுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.

ஏழை மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும், சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும், தனித்தன்மை கொண்ட சிறப்பான பல திட்டங்கள் தந்து, அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவது தான், ஒரு ஜனநாயக அரசின் அடிப்படைக் கடமை என்ற, உறுதியான கொள்கை நிலைப்பாட்டை கொண்டவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அந்தப் போற்றுதலுக்குரிய பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில், தன்னுடைய ஆட்சியின் அனைத்துத் திட்டங்களையும் தாயுள்ளத்தோடு தீட்டி, கருணையுடன் செயல்படுத்தியவர், நம் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், பெருமை சேர்க்கும் வகையில், எண்ணற்ற மக்கள் நலப் பணிகளைச் செய்து, அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கும், நம் கழக அரசின் அத்தனை சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, கழக அரசுக்கு மேலும், மேலும் ஆதரவு பெருகிட உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், தொடர்ந்து மூன்று முறை சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த வரலாற்றுச் சாதனை படைத்தவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.. தன்னுடைய கலை உலகப் பயணத்தின் மூலம், `எங்கள் தங்கம்’ என்று எல்லோராலும் கொண்டாடப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தன்னுடைய அரசியல் பயணத்தின் மூலம் அழியாப் புகழ் பெற்று, சாதனைகளின் நாயகராக மக்கள் மனதில் இன்றும் போற்றப்படுகிறார்.

புரட்சித்தலைவரின் சாதனைகளைப் போல, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றிகளை கழகத்திற்குப் பெற்றுத் தந்தவர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடத்தின் அடிப்படையில், வீரத்துடன், விவேகத்துடன் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்றிட உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.

ஒரு இயக்கத்திற்கு நல்ல தொண்டர்கள் வேண்டும்,
ஒரு தொண்டனுக்கு நல்ல தலைமை வேண்டும்,
இவை இரண்டுமே அமைந்திருப்பது
நமக்கு மட்டும் தான்! நமக்கு மட்டும் தான்!!
அந்த உணர்வோடு… அந்த உறுதியோடு… அந்த ஒற்றுமையோடு
சந்திப்போம்… சந்திப்போம்…
உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம்…
சாதிப்போம்… சாதிப்போம்…
உள்ளாட்சித் தேர்தலில் சாதிப்போம்…
பறிப்போம்… பறிப்போம்…
வெற்றிக் கனியைப் பறிப்போம்…
சமர்ப்பிப்போம்… சமர்ப்பிப்போம்…
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா இருவரும்
நீடுதுயில் கொள்ளும் புண்ணிய மண்ணில் சமர்ப்பிப்போம்!
வெல்க! வெல்க!! வெல்கவே!!!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
என்றும் வெல்க! வெல்க!! வெல்கவே!!!

இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.