தற்போதைய செய்திகள்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்

சென்னை

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்காக ஓய்வூதிய அடையாள அட்டைகளை தொழிலாளர் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசியதாவது:- 

தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரதம மந்திரி தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் (PM-SYM – NPS) மூலம் பயன்பெறும் வகையில் 30.11.2019 முதல் 06.12.2019 வரை ஓய்வூதிய வாரமாக கொண்டாடவும் மற்றும் பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தகுதியுடையராவர், இத்திட்டத்தில் சேரும் உறுப்பினர்களின் வயதிற்கேற்ப மாதந்தோறும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பிரிமீயம் செலுத்த வேண்டும். இதற்கு இணையான பிரிமீய தொகை ஒவ்வொரு உறுப்பினருக்கும் மத்திய அரசால் செலுத்தப்படும் உறுப்பினர்களின் மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கு கீழே இருக்க வேண்டும் வருமான வரி கட்டுபவர்கள் இத்திட்டத்தில் சேரமுடியாது.

மேலும் இத்திட்டத்தில் சேர அமைப்புசாரா தொழிலாளர்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு (Common Service Centre) சென்று பதிய வேண்டும். அவ்வாறு செல்லும் போது ஆதார் அட்டை, கைப்பேசி, சேமிப்பு வங்கி கணக்கு, நியமனதாரர் விவரம் மற்றும் முதல் தவணைக்குரிய தொகையினை ரொக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும். வரும் மாதங்களிலிருந்து உறுப்பினரின் சேமிப்பு வங்கி கணக்கிலிருந்து மாத தவணை வங்கியின் மூலம் செலுத்தப்படும்.

கணினியில் பதிவேற்றம் செய்த பின்பு ஓய்வூதிய கணக்கு எண் உருவாக்கப்பட்டு அதனுடைய நகல் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அதன் பின் அடையாள அட்டையும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வூதிய கணக்கில் வரவு செய்யப்பட்ட விவரம் அவ்வப்போது எஸ்.எம்.எஸ். மூலம் உறுப்பினருக்கு தெரிவிக்கப்படும்.

இத்திட்டங்களின் கீழ் அதிகளவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக உள்ளூர் கேபிள் டிவி, பத்திரிக்கை செய்தி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விளம்பரம் செய்யப்படுகிறது மேலும் தொழிலாளர் துறை வாயிலாகவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுநாள் வரை 53,549 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளார்கள்.

இதேபோன்று மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தில் சிறு வணிகர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டதின் கீழ் வருடத்திற்கு 1.5 கோடிக்கு மிகாமல் வணிகம் செய்யும் சிறு வணிகர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சேர்வதற்கான வயது மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் பதிவு முறை அனைத்தும் பி.எம்-எஸ்.வொய்.எம். திட்டத்தை போன்றதேயாகும். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 28.11.2019 வரை ஏறக்குறைய 211 வணிகர்கள் பதிவு செய்துள்ளனர் என்ற விவரத்தையும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் தொடங்கப்பட்ட நாள் முதல் 31.10.2019 வரை 74 லட்சத்து 66 ஆயிரத்து 129 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 51 லட்சத்து 11 ஆயிரத்து 398 பயனாளிகளுக்கு, ரூ.1622 கோடியே 82 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இத்திட்டத்தில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்க 30.11.2019 முதல் 06.12.2019 வரை மாநில அளவில் ஓய்வூதிய வாரமாக கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதை ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்தி பயனடையுமாறு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் எம்.டி.நசீமுத்தீன், தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா.நந்த கோபால், கூடுதல் தொழிலாளர் ஆணையர் அ.யாஸ்மின் பேகம், தொழிலாளர் இணை ஆணையர் எஸ்.கோவிந்தன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய செயலாளர் குமரன், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் தி.தமிழரசி மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் கலந்து கொண்டனர்.