தற்போதைய செய்திகள்

அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றியே தீருவோம் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சபதம்

மதுரை

கழகம் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சபதம் மேற்கொண்டார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 5-ந்தேதி வருகிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றத்தில் இலக்கிய அணி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக அன்னதான கூடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திருவுருவ படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி ராஜன்செல்லப்பா பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து மாபெரும் எஃகு கோட்டையாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முதலமைச்சராகி 16 வருடங்கள் புரட்சித்தலைவரின் புனித ஆட்சியை நடத்தி வந்தார். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு பசிப் பிணியை போக்கும் அன்னபூரணியாக வாழ்ந்தார். மாதம்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி, ஆலயங்கள் தோறும் அன்னதானம், ஏழை எளியவர்கள் பசிப்பிணி போக்க அம்மா உணவகம் தொடங்கி மாபெரும் புரட்சி படைத்தார்.

அம்மாவின் மறைவிற்குப் பின் இன்றைக்கு அம்மாவின் வழியில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருக்கிறார். புரட்சித்தலைவி அம்மா நம்மை விட்டுச் சென்று மூன்று வருடங்கள் ஆனாலும் இன்றைக்கும் நம் மனதில் இதய தெய்வமாக வாழ்ந்து வருகிறார்.

கழகம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா அவர்கள் தனது இறுதி லட்சியமாக முழக்கமிட்டார். அந்த லட்சியத்தை மக்களாகிய நீங்கள் நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும். எனவே வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியை கழகத்திற்கு தர வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.