சிறப்பு செய்திகள்

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

சென்னையில் நேற்று தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூ.5027 கோடி முதலீட்டில் 23,351 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 9 தொழில் நிறுவனங்களுடன் இந்நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்ட 3 அமெரிக்க நிறுவன திட்டங்களையும், ரூ.60 கோடி மதிப்பீட்டில் 3 உயர்தர திறன் மேம்பாட்டு மையங்களையும், தொழில் நிறுவனங்களுக்கான குறை தீர்க்க உதவும் தொழில் நண்பன் என்ற இணையதளத்தையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ரூ.28.43 கோடி மதிப்பீட்டில் 2 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டி.ஆர்.டி.ஓ. மற்றும் ஐ.ஐ.டி. சென்னை நிறுவனங்களுடன் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்நிகழ்ச்சியில் கையெழுத்தாகின. திறன் மேம்பாட்டு ஆய்வறிக்கை மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு திட்டங்கள், தமிழ்நாடு தொழில் வழிகாட்டு நிறுவனத்தின் புதிய பெயர் மற்றும் இலச்சினை முதலமைச்சர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

தொழில் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அம்மாவின் அரசு மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக நானே அரசு முறை சார்பில் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்தேன். அதன்மூலம் இன்று 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஆண்டு ஜனவரியில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.19 ஆயிரம் கோடிக்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளார்கள். இதன் மூலம் 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தொழில்துறை மேம்பாட்டிற்கென ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படுவதே இதற்கு காரணம். நலிவடைந்த தொழிற்சாலைகளை சீரமைப்பதில் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டதின் பயனாக பல தொழில்கள் மேம்பாடு அடைந்துள்ளன. மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றிருக்கிறது. தொழில் துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதாக இந்தியா டுடே தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறது. இப்படி தொழில் துறையில் நாம் பெற்றுள்ள முன்னேற்றம் பெருமைப்படத் தக்கது ஆகும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.