சிறப்பு செய்திகள்

27, 30 தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் – மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இம்மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், 16-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27-ந்தேதியும், 30-ந்தேதியும் இரண்டு கட்டமாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதி தொடங்கி அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் ஜனவரி 6-ந்தேதி பதவியேற்பார்கள். கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டமும், பதவியேற்பும் ஒரே நாளில் நடைபெறும். கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டார். தேர்தல் அறிவிக்கை 6.12.2019 அன்று வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 13-ந்தேதி கடைசி நாள் ஆகும். 18-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 18-ந்தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு 27-ந்தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30-ந்தேதியும் நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதி நடைபெறும். ஜனவரி 4-ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவடைகிறது. 11-ந்தேதி மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறும். ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 974 இடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 31 மாவட்ட ஊராட்சிக்குட்பட்ட 655 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 6671 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12,524 ஊராட்சி தலைவர் பதவியிடங்களும் மற்றும் 99 ஆயிரத்து 334 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறாது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறும். முதல்கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49, 688 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

இரண்டாம் கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6273 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49 ஆயிரத்து 686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 30-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளம் சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் வெள்ளை நிறத்திலும், மற்ற ஒரு வார்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். முதல்கட்ட வாக்குப்பதிவில் 31, 698 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 32 ஆயிரத்து 92 வாக்குச்சாவடிகளிலும் ஆக மொத்தம் 63 ஆயிரத்து 700 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ளபடி உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது.

ஊரக பகுதிகளில் ஒரு கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 941 ஆண் வாக்காளர்களும், ஒரு கோடியே 67 லட்சத்து 4 ஆயிரத்து 868 பெண் வாக்காளர்களும், 2777 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 3 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 86 வாக்காளர்களும் உள்ளனர்.

முதல் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் வாக்காளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்கான 870 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 16 ஆயிரத்து 840 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் 4 பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏனைய பதவியிடங்களுக்கு சுமார் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பார்வையாளராக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 200 ரூபாய் வைப்புத் தொகையும், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு 600 ரூபாய் வைப்புத் தொகையும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 1000 ரூபாய் வைப்புத் தொகையும் செலுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 100, 300, 500 வைப்புத்தொகை செலுத்த வேண்டும். வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுபவருக்கு ரூ.34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவருக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களால் கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்படும். தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.