சிறப்பு செய்திகள்

செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி அரசு மருத்துவமனைகளுக்கு பெருமை தேடிதர வேண்டும் துணை முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி அரசு மருத்துவமனைகளுக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில்  நடைபெற்ற செவிலியர்கள், மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஆற்றிய உரை வருமாறு:-

உலகின் சாதனைப் புத்தகங்களில் பதிவிடும் அளவிற்கு, ஒரே நேரத்தில், 4503 செவிலியர்கள் உட்பட மருத்துவ அலுவலர்கள், ஆய்வக நுட்புணர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், மற்றும் இளநிலை உதவியாளர்கள் என, மொத்தம் 5224 பேர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படும் இந்த மாபெரும் விழாவில், பங்கேற்கும் நல்வாய்ப்பை எனக்கு அளித்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும், தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று பணியாணை பெறுகின்ற பணியாளர்கள் அனைவரும், யாரும் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி, யார் மீதும் எந்த விதமான குற்றச் சாட்டும் சுமத்த இயலாதபடி, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

உயிர்காக்கும் பணியான மருத்துவத் துறை பணியாளர் நியமனங்களில் எந்தவித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காத வகையிலும், யாரும், யார் மீதும் குற்றம் கூற முடியாதபடியும், தகுதிக்கும், திறமைக்கும் மட்டுமே முன்னுரிமை தந்து, தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடும்,

அரசு மருத்துவமனைகளில், மருத்துவர், செவிலியர் முதலான அத்தியாவசிய பணியிடங்களை, உடனுக்குடன் நிரப்பிட வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடும் .நாட்டிலேயே முதன் முதலாக, மருத்துவத் துறைக்கென தனியாக ஒரு தேர்வு வாரியத்தை, இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 2012-ம் ஆண்டில் அமைத்தார்.

அம்மா அவர்களின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில், இவ்வாரியம் சிறப்பாகச் செயல்பட்டு, இது வரை 27,436 நபர்களை தேர்வு செய்துள்ளது என்பதைக் குறிப்பிட்டு கூற விரும்புகிறேன். இந்த சீரிய பணியை செம்மையுடன் ஆற்றியுள்ள மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு சுகாதாரமான சூழ்நிலை மிகவும் அவசியமாகும். சுகாதாரமான சூழ்நிலைக்கு ஐந்து காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன.

ஒன்று, தூய தண்ணீர். இரண்டு, தூய காற்று. மூன்று, திறமையான வடிகால்கள், நான்கு, தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் ஐந்தாவதாக, இயற்கையான சூரிய ஒளி. இந்த ஐந்து காரணங்களில் ஏதேனும் ஒன்று குறை பட்டாலும் அது மனிதனின் உடல் நலிவுக்கு காரணமாக அமைந்து விடும். அவ்வாறு மனிதனின் உடலில் ஏற்படும் நலிவு, பலவிதமான நோய்கள் உடலில் குடிபுக வழி அமைத்துத் தந்து விடுகிறது. இதனால்தான் நேரான பழக்கங்களை மேற்கொண்டு சீரான முறையில் நம் உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

உடல் நோய் கண்டு விட்டால், நிம்மதி கரைந்து போகும். மகிழ்ச்சி மறைந்து போகும். அதனால் தான், நமது முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று பழமொழி வகுத்துத் தந்தார்கள். பெருகி வரும் மக்கள் தொகை, வளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமைகள், உழைக்கும் நேரத்தை மட்டுமல்ல, நமது உறங்கும் நேரத்தையும் பறித்துக் கொள்ளும் கணினி மற்றும் சமூக வலைதளங்கள், திட்டமிட்டு நம்மை சோம்பேறிகளாக்கும் கைபேசிக் செயலிகள், என புதுப்புது காரணிகள், நோய்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து நம் உடலில் குடியேற வழி அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக் கின்றன. இதனாலும், இன்ன பிற காரணங்களாலும், நோய் நமது உடலில் நிரந்தரமாக குடிபுக எத்தனிக்கும் போதுதான், அங்கு மருத்துவமும், மருத்துவ சிகிச்சைகளும், உள்ளே வருகின்றன.

நோய்கள் குறித்தும், நோய் தீர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூற, மருந்து எனும் தலைப்பில், வள்ளுவப் பெருமான் ஒரு தனி அதிகாரத்தையே படைத்திருக்கிறார். “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்” என்கிறது திருக்குறள்.

உடல் காட்டுகின்ற குணம் மற்றும் அறிகுறிகளைக் கொண்டு, நோயை அறிய வேண்டும். அந்த நோய் உடலை அண்டி இருப்பதற்கான அடிப்படைக் காரணத்தை அறிய வேண்டும். பின் அதைத் தீர்க்கும் வழியை அறிய வேண்டும். இம்மூன்றும் அறிந்து, அதற்கேற்ப பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும், என்கிறார் திருவள்ளூவர். வள்ளுவப் பெருந்தகை சொன்ன வழி நின்று, தமிழக மக்களை நோயின் பிடிக்கு ஆட்படாமல் காக்கவும், நோய்வாய்ப்பட்டால், அந்நோயின் தாக்குதலிலிருந்து அவர்களை விடுவித்துக் காப்பாற்றவும், மாண்புமிகு அம்மா அவர்களது அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் பொற்காலம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவார்கள். அதுபோல, தமிழகத்தில் மாண்புமிகு அம்மா அவர்களது அரசின் ஆட்சிக் காலம், தமிழக மக்களின் பொற்காலம் என்று தற்கால தலைமுறையும், வருங்காலச் சந்ததியினரும் வாழ்த்துவார்கள்.

அந்த அளவிற்கு, எண்ணிலடங்கா சாதனைகளை அனைத்து துறைகளிலும் படைத்துள்ளது மாண்புமிகு அம்மா அவர்களது அரசு. ஒவ்வொரு அரசுத் துறையும், பிற துறைகளின் சாதனைகளை மிஞ்ச வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒரு துறையாக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை திகழ்கிறது.

இதயதெய்வம், புரட்சித்தலைவி, அம்மா அவர்கள், தொலைநோக்கு திட்டம் 2023 ஆவணத்தை உருவாக்கித் தந்து, வளர்ந்த நாடுகள் அடைந்துள்ள சுகாதார குறியீடுகளை 2023-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு அடைந்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டார். அம்மா அவர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்து, அவர்கள் வகுத்து தந்த இலக்கையும் மிஞ்சும் அளவிற்குப் பணிகள் தற்போது முனைப்பாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்று சொன்னால், கடந்த 8 ஆண்டுகளில், 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு, 1350 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 1213 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு, ஒரே வருடத்தில் மட்டும், ஒன்பது மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 900 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைத்துள்ளன.

அம்மா அவர்களின் வழி நின்று, அம்மா அவர்களது அரசின் சுகாதாரத் துறை, செய்துள்ள சாதனைகளை, தானே முறியடித்து, மேலும் பல சாதனைகள் படைத்திட, இன்று பணியாணை பெற்றுள்ள செவிலியர்களும், மருத்துவ அலுவலர்களும், மற்ற அனைவரும் உறுதி மேற்கொண்டு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். நோயாளியின் அருகில் இருந்து வேளை தவறாமல் மருந்து கொடுத்து அவர்களைக் கவனித்துக் கொள்வது யார்? செவிலியர்கள் தானே! இதைத்தான் உழைச்செல்வான் என வள்ளுவர் எடுத்துச் கூறி இருக்கிறார்.

செவிலியர்கள் கடமைக்கு மட்டுமே வேலை செய்பவர்கள் அல்ல. தங்கள் வேலையை கடமையாகச் செய்பவர்கள் அவர்கள். நோயாளி குணம் அடைவதில் அவர்களது பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு செவிலியர் எவ்வாறு கடமையாற்றுகிறார் என்பதை “தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் என்ஸைக்ளோப்பீடியா ஆப் மெடிசன்” கலைக் களஞ்சியம் வெகு அழகாக எடுத்துக் கூறுகிறது.

“நோயாளியின் நோய் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி செவிலியர் சிந்திப்பது இல்லை. அந்த நோய் எந்த அளவு அவரை பாதித்திருக்கிறது என்பதற்கே, அவர் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார். காயம்பட்ட உடலுக்கு மட்டுமன்றி, புண்பட்ட உள்ளத்திற்கும், அவர் மருந்து இடுகிறார். நோயின் பாதிப்புகளை எதிர்கொண்டு சமாளிக்க, தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்கிறார். நோயாளி சொல்வதை பொறுமையோடு காது கொடுத்துக் கேட்டு, அவரது நிலைமையைப் புரிந்து கொண்டு, அவருக்கு ஆதரவும், ஆறுதலும் அளிக்கிறார்” என்கிறது அந்த கலைக் களஞ்சியம்.

இன்றைய தினம் பணி நியமனம் பெற்றுள்ள, அனைவரும், “மக்களுக்காகவே நாம்” என்ற அம்மா அவர்களின் உயர்ந்த சிந்தனையோடு, மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்றும், தமிழக மக்கள் தனியார் மருத்துவமனைகளை விட, அரசு மருத்துவமனைகளையே நம்பி, விரும்பி அதிக எண்ணிக்கையில் வருகிற அளவிற்கு, அரசு மருத்துவமனைகளில் உங்களது சேவை அமைய வேண்டும் என்றும், அதன் மூலம் நமது மாநிலத்திற்குப் பெருமையை பெற்றுத் தர வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிகக் குறுகிய கால அவகாசத்தில் இவ்விழாவை மிகச் சிறப்புடன் ஏற்பாடு செய்திருக்கும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்ம், அரசுச் செயலர் டாக்டர் பீலா ராஜேஷ், உறுதுணையாக இருந்த சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.