தற்போதைய செய்திகள்

அரசின் திட்டங்களை பெற்று வாழ்க்கையில் முன்னேறுவீர் – பொதுமக்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வேண்டுகோள்

தூத்துக்குடி

அரசின் திட்டங்களை பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் பரமன்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி ஏ.ஆர்.ஏ.எஸ். திருமண மண்டபத்தில், முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டக்கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு 50 பயனாளிகளுக்கு ரூ.2,38,91,410 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு உத்தரவு, 312 பயனாளிகளுக்கு ரூ.5,07,000 மதிப்பில் முதியோர் ஓய்வூதிய தொகை வழங்குவதற்கான ஆணைகள், 63 பயனாளிகளுக்கு ரூ.5,89,510 மதிப்பிலான விலையில்லா வெள்ளாடுகள், 9 விவசாயிகளுக்கு ரூ.1,32,765 மதிப்பிலான விவசாய இடுபொருட்கள், ரூ.4,75,000 மதிப்பில் மானிய விலையில் 19 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,49,000 மதிப்பிலான நவீன சக்கர நாற்காலிகள், அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் 4 பேருக்கும், அம்மா குழந்தைகள் நல பெட்டகம் ஒரு பயனாளிக்கும் என மொத்தம் 662 பயனாளிகளுக்கு ரூ.2,57,54,185 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட பொங்கல் பரிசு திட்டத்தினை செயல்படுத்தினார். முதலமைச்சர் பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமாக கடந்த ஆண்டு வழங்கினார். அதேபோல் இந்த வருடமும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 9 மருத்துவக் கல்லூரிகளை துவக்கிட மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் 1500 மருத்துவ படிப்புக்கான இருக்கைகள் அதிகரிக்கும். அரசின் திட்டங்களை பெறும் நீங்கள் அவைகளை முறையாக பயன்படுத்தி வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.