கரூர்

213 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு,மாடுகள் – கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

கரூர்

கரூரில் 213 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர் மாவட்டம் தாந்தோனி ஊராட்சி ஒன்றியம் மணவாடி ஊராட்சியில் 163 பயனாளிகளுக்கு ரூ.20.87 லட்சம் மதிப்பில் விலையில்லா ஆடுகளையும், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கம்மநல்லூர் ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ.19.25 லட்சம் மதிப்பில் விலையில்லா கறவை மாடுகள் என 213 பயனாளிகளுக்கு ரூ.40.12 லட்சம் மதிப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் வகித்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஏழை, எளிய கிராமப்பபுற பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப் பொருளாதாரம் என்பது மிக முக்கியமானது. கிராம பொருளாதாரம் வலுவாக இருந்த காரணத்தால் தான், உலகப்பொருளாதார மந்தநிலை இருந்தபோதுகூட இந்தியா அதிலிருந்து தற்காத்துக் கொண்டது.

130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் வேளாண் தொழில் என்பது, வாழ்வாதாரத்திற்கான அடிப்படையான தொழிலாக இருக்கிறது. அந்த வேளாண் தொழிலுக்கு உபதொழிலாக மாடு, ஆடு, கோழி வளர்ப்பு தொழில்கள் இருக்றது. பெண்களின் நலனுக்காகவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அம்மா அவர்கள் எண்ணிலடங்கா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.

அம்மா அவர்கள் அறிவித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும், அவர் ழியில் நல்லாட்சி நடத்திவரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழக அரசின் சிறப்பு திட்டங்களுள் ஒன்றான ஏழை, எளிய கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படத்தப்பட்டு வருகிறது.

இதுவரை திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தோடு இணைந்திருந்த கரூர் மாவட்டத்தை பிரித்து, தற்போது கரூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தை உருவாக்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது கரூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் 65,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

அம்மாவின் வழியில் செயல்படும் முதலமைச்சர் சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பினை அறிவித்திருக்கிறார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 12800 குடும்ப அட்டைதார்கள் விண்ணபித்துள்ளார்கள். கரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 35,327 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 23,939 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 8,000 பேருக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் மனு அளிக்காமல் உள்ள தகுதியான அனைவரும் தற்போது விண்ணப்பித்தால் முதியோர் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.