கடலூர்

வெள்ள தடுப்பு பணிகள் அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் ஆய்வு

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் வட்டம், தங்கராஜ் நகர் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளையும், குறிஞ்சிப்பாடி வட்டம், கொளக்குடி பகுதிகளில் நெய்வேலி சுரங்கப்பாதையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெற்பயிர்கள் முழ்கி கிராம மக்கள் பாதிக்கப்பட்டதை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் முன்னிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:-

மழைக் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ள தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு மூன்று வேலையும் உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் எல்லா பகுதிகளுக்கும் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் 24 மணி நேர 1077 என்ற எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களிடம் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, வருவாய் கோட்டாட்சியர் (கடலூர்)
ஜெகதீஸ்வரன், நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.