தர்மபுரி

மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க கழக ஆட்சியில் புதுமைத் திட்டங்கள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க கழக ஆட்சியில் புதுமை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், டி.அய்யம்பட்டியில் ரூ.1 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு உயர் நிலைப்பள்ளி கட்டடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான் தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறையில் 26 பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள் ரூபாய் 6.24 கோடி நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் 31 பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள் அறிவியல் ஆய்வக கட்டிடங்கள் கழிவறை கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ரூ.36.36 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.

மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நபார்டு நிதி உதவி திட்டத்தில் 17 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் அறிவியல் ஆய்வக கட்டடங்கள் கழிவறை கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவைகள் ரூ.29.12 கோடி மதிப்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 5 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ரூ.4.56 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 6 பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் வகுப்பறை கட்டடங்கள் கலை மற்றும் ஓவிய வகுப்பறை கட்டடம் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறை கட்டடங்கள் இயற்பியல் மற்றும் விலங்கியல் வகுப்பறை கட்டடங்கள் ஆகியவை ரூ.3.23 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் நிலையில் உள்ளது.

தமிழக அரசு கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி கல்வித் துறையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி வகுப்பறை கட்டடங்கள் ஆய்வக கட்டடங்கள் மற்றும் கழிப்பறை கட்டடங்களை அரசு அமைத்து வருகிறது. மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பள்ளி கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு புதிய கல்லூரிகள் தொடங்கி, புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவித்த காரணத்தினால் இந்திய அளவில் உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி 26 சதவீதமாகவும், தமிழகத்தில் 49 சதவீதமாக உள்ளது. திருமண நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் பொன்னுவேல், சிவப்பிரகாசம், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, உதவி செயற்பொறியாளர்கள் தியாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பழனிசாமி, மதிவாணன் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.